Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு : பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை: மதுரையில் வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் பொதுக்­குழு உறுப்பினர், மாநில நிர்­வா­கி­கள், அணிகளின் அமைப்பாளர்பொதுச்செயலாளர்களுக்கு துரைமுருகன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மதுரையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே அரங்கில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்த தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. மழை, காற்று, வெயிலால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் உள்ளரங்க அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்ட அரங்கத்தின் முன்பாக 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. மேலும், முகப்பு பகுதி ‘அறிவாலயம்’ போல வடிவமைக்கப்பட்டு வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களது வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கும் இடவசதி தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தலை­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் வருகிற 1ம் தேதி(ஞாயிற்­றுக்­கி­ழமை) காலை 9 மணி­ய­ள­வில் திமுக பொதுக்­கு­ழுக் கூட்­டம் மதுரை, உத்­தங்­குடி, “கலை­ஞர் திட­லில்” நடை­பெ­றும். அது­போது பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் தவ­றாது கலந்து கொள்­ளு­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன். கூட்டத்தில் கட்சியின் ஆக்­கப்­ப­ணி­கள் குறித்து விவாதிக்கப்படும்.

தணிக்­கைக்­குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். திமுக பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் கலந்து கொள்ள வரும் அந்தந்த மாவட்­டத்­திற்­கு உட்­பட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், மாநில நிர்­வா­கி­கள் -அணிகளின் அமைப்பாளர்கள் ஆகி­யோர் கூட்­டம் நடை­பெ­றும் அரங்­கத்­திற்கு வெளியே தங்­கள் மாவட்டத்தின் பெயர் பொறித்­துள்ள கவுண்­ட­ரில் வைத்­துள்ள ‘மினிட்’ புத்­த­கத்­தில் கையொப்­ப­மிட்டு, தங்களுக்குண்டான ‘பேட்ஜ்’ஐ பெற்­றுக் கொண்டு, காலை 9 மணிக்­குள் பொதுக்­குழு நடை­பெ­றும் கூட்ட அரங்­கத்­திற்­குள் மாவட்ட வாரியாக அமர்ந்­திட வேண்­டு­மென கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.