Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை ஆதீனத்துக்கு 2வது முறையாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன்

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு 2வது முறையாக சென்னை கிழக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மத மோதலை தூண்டும் வகையில் பேசிய நிலையில் ஜூலை 5-ம் தேதி மதுரை ஆதினம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் கடந்த மே மாதம் நடைபெற்ற சைவ சித்தாந்தம் மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதினம் வந்து கொண்டிருந்த போது மே 2-ம் தேதி காலை 9.40 மணி அளவில் உளுந்தூர் பேட்டை பகுதியில் ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்படுத்த முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம் தன்னை கொலை செய்ய சதி நடைபெற்றதாகவும் இதில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது விபத்து ஏற்படுத்தியவர்கள் தாடி வைத்திருந்ததாகவும் குல்லா அணிந்திருந்ததாகவும் புகார் தெரிவித்தார். நீண்ட தொலைவு துரத்திவந்து சாலை தடுப்புகளை உடைத்து தங்கள் கார் மீது மோதியதாகவும் குற்றம்சாட்டினார்.

மதுரை ஆதீனத்தின் புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டது. அதில் திருச்சி,சென்னை நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக செல்வதும் இடதுபுறத்தில் இருந்து மற்றொரு கார் கட்டுப்பாட்டான வேகத்தில் வந்து கொண்டிருந்ததும் பதிவாகி இருந்தது. மேலும் கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரை மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக கடப்பதும் இதை அடுத்து கட்டுப்பாடான வேகத்தில் வந்த காரில் பிரேக் போடப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் அம்பலமானது.

உண்மை வெளிவந்த நிலையில் ராஜேந்திரன் என்பவர் சென்னை காவல்ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் மாற்று மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதோடு சைவ சமயத்தினரின் உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும்தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பான தகவல்களை மதுரை ஆதினம் தொடர்ந்து பரப்பி வருவதாகவும் புகாரில் குற்றம்சாட்டி இருந்தார்.

இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை ஆதீனத்தின் கருத்துக்கள் உள்ளதால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். புகார் குறித்து விசாரித்த சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் இரு சமூகங்களுக்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் பொது தீமைக்கும் வழிவகுக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதினம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜூன் 29-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில் தற்போது மீண்டும் ஜூலை 5-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.