Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மத்தியபிரதேசத்தில் ‘இன்ஸ்டா’ காதலியை கொன்று சடலத்தை கழிவுநீர் தொட்டிக்குள் வீசிய கள்ளக்காதலன்: குற்றவாளி தலைமறைவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்ஸ்டாகிராம் காதலியை கொடூரமாக கொலை செய்து சடலத்தை கழிவுநீர் தொட்டியில் வீசிய காதலன் குடும்பத்துடன் சிக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தை சேர்ந்த சியா (33) என்பவருக்கும் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசிக்கும் சமீர் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஏற்கனவே திருமணமான சமீர் அந்த உண்மையை மறைத்து சியாவுடன் பழகியுள்ளார். இதனை அறியாத சியா, தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போபாலுக்கு வந்து சமீருடன் ஒரே வீட்டில் வாழ தொடங்கியுள்ளார். அப்போது சமீருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சியாவுக்கும், சமீரின் மனைவிக்கும் இடையே வீட்டில் அடிக்கடி கடும் குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

சமீரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சியா தொடர்ந்து வற்புறுத்தியதுடன், இல்லையெனில் 5 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த திங்கட்கிழமை இரவு சியாவுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது அவரது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். சியாவின் உடலை ஒரு பெரிய இரும்பு பெட்டிக்குள் திணித்து மூடிய இவர்கள், ஆதாரங்களை மறைப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் அருகே காலியாக இருந்த இடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் அந்த பெட்டியை வீசியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கழிவுநீர் தொட்டியிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளனர். பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு இரும்பு பெட்டி மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியிலிருந்து பெட்டியை மீட்டனர். அதனை திறந்து பார்த்தபோது சியாவின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. சியாவின் கையில் இருந்த விளக்கு பச்சை மற்றும் அதில் இருந்த 26ம் தேதி மே மாதம் 1992ம் ஆண்டு என்ற பிறந்த தேதியை அடையாளமாக கொண்டு போலீசார் அவரது தகவலை உறுதி செய்தனர்.

இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 24 மணிநேரத்தில் துப்பு துலக்கினர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோஜ் பட்வா கூறுகையில், ‘மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் சுமார் நான்கு நாட்கள் பழமையானது. முதற்கட்ட விசாரணையில் சியா கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த சமீரின் தாய், சகோதரர் மற்றும் சகோதரியை கைது செய்துள்ளோம். தற்போது தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி சமீரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சியாவிற்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இந்த கொலையின் முழு பின்னணியும் தெரியவரும்’ என்றார்.