மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி தலைவர்கள் இன்றும், நாளையும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் மின் வெட்டு மற்றும் பணப்புழக்கம் இல்லாதது, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, தவெக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மதுராந்தகம் தொகுதியில் 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சியை சேர்ந்த 10 பேர், சுயேட்சை வேட்பாளர்கள் 17 பேர் என 27 பேர் போட்டியில் உள்ளனர். திமுக வேட்பாளர் பரந்தாமன், தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்தி, நாம் தமிழர் வேட்பாளர் ஜானகிராமன் ஆகியோர் களத்தில் உள்ளனர். அதேபோல, இடைத்தேர்தல் நடக்கும் மற்றொரு தொகுதியான தாராபுரத்தில் 22 பேர் போட்டியில் உள்ளனர்.
திமுக வேட்பாளர் சுகன்யா, தவெக வேட்பாளர் சத்தியபாமா, அதிமுக வேட்பாளர் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 2 தொகுதிகளிலும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்த இடைத்தேர்தல், மக்களிடம் திணிக்கப்பட்ட தேர்தலாகவே அத்தொகுதி மக்கள் பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் அனைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இந்த நேரத்தில், ஆட்சியாளர்கள் விலைவாசியை குறைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக கட்சி தலைமை அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்குவதில்தான் இன்னும் குறியாக உள்ளது. அதில் விலைபோன இரண்டு எம்எல்ஏக்கள் தொகுதியில் தான் மீண்டும் இப்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நேரத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக மின்வெட்டு கிராமங்களில் கடுமையாக உள்ளது. இதனால், மின்மோட்டார்கள் அடிக்கடி பழுதடைகிறது. முறையாக விவசாயம் செய்ய முடியவில்லை. இரவில் குறைந்தழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. யாருடைய கையிலும் பணம் இருப்பதில்லை. 10 பொருட்கள் வாங்கும் மக்கள் தற்போது 3 பொருட்கள் மட்டுமே வாங்குகின்றனர். இதனால் வாங்கும் சக்தியும் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். மொத்தத்தில் கிராம பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதனால், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, பணம் வாங்கி ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெக சார்பில் போட்டியிடும் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்ற பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்குள் வாக்கு கேட்டு வரக்கூடாது என்று உள்ளே விடாமல் விரட்டியடிக்கும் சம்பவமும் தினசரி அரங்கேறி வருகிறது. இதனால், தவெக தோல்வி அடையும் நிலை உருவாகி வருவதால், முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் நேரில் சென்று ஒரு நாள் பிரசாரம் செய்தார். ஆனாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், நேற்று ஒரே நாளில் மதுராந்தகம் தொகுதியில் மட்டும் 40 இடங்களுக்கு தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஒரு முதல்வர் இப்படி ஒரு தொகுதியில், ஒரே நாளில் 40 இடங்களுக்கு சென்று வாக்கு கேட்டது இதுதான் முதல் முறையாகும். அந்தளவுககு தவெக கட்சியினரிடம் பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் விஜய் நாளை மீண்டும் தாராபுரத்தில் 30 இடங்களில் ரோடுஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், பிரேமலதா, ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். அதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மாலை மதுராந்தகம் தொகுதியில் 3 இடங்களில் பிரசாரம் செய்கிறார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். அதேபோன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரும் இன்றும், நாளையும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதைத்தொடர்ந்து, தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கள் வெளியேற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 6ம் தேதி (செவ்வாய்) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பின்னர் 9ம் தேதி (வெள்ளி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அன்றைய தினம் காலை 9 மணிக்கெல்லாம் முன்னணி நிலவரம் தெரியவரும்.

