மதுராந்தகம் சுற்று வட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரமான நல்ல தண்ணீர் குளம் பாழாகும் அபாயம்: வேலி அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் தொன்னாடு ஊராட்சியில் 6 ஏக்கர் பரப்பளவில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்த குளம் மன்னர் காலத்தில் கிராமத்தின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குளக்கரையை சுற்றி 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தக் குளத்தின் நீரை அப்பகுதி மக்கள் பல தலைமுறையாக குடிநீருக்காகவும், உணவு சமைக்கவும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தின் நீரை இந்த நவீன யுகத்திலும் கிராம மக்கள் இன்றுவரை அப்படியே கையில் மொண்டு குடிக்கின்றனர். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும் இந்த நீரை குடிக்க பழகி வைக்கின்றனர். இதனால் குடிநீராக பயன்படும் இந்த குளத்திற்கு அந்நியர்கள் வேறு யாரும் வந்து செல்லாதவாறு சுற்றி வேலி கம்பிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நல்ல தண்ணீர் குளம் அந்த கிராமத்தின் மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் மலை குன்றின் மீது பெய்யும் மழை நீரானது அந்த மலையில் உள்ள மூலிகைகளின் கலந்து இந்த குலத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தண்ணீரை அப்பகுதி மக்கள் அப்படியே குடிப்பதால் சளி, காய்ச்சல், உடல் சூடு உள்ளிட்ட வியாதிகள் விரைவாக குணமடைவதாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் நல்ல தண்ணீர் குளத்து நீரில் சமைத்தால் சமையல் செய்த சாதம் விரைவாக கெட்டுப் போகாது என்று சுற்று வட்டார மக்கள் நம்புகின்றனர். குழம்பு மற்றும் உணவு வகை சுவையாக உள்ளதால் பல தலைமுறையாக இந்த குளத்தின் நீரை சமையலுக்கு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்நியர்களால் அசுத்தம்
தொன்னாடு கிராமத்தில் உள்ள சாலை வழியாக லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் அந்நியர்கள் காலை நேரங்களில் இயற்கை உபாதை கழித்துவிட்டு இந்த குளத்தை அசுத்தம் செய்கின்றனர். மேலும் பலர் இறங்கி கை, கால் கழுவுவது உள்ளிட்ட அநாகரிக செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
வற்றாத குளம்
நல்ல தண்ணீர் குளத்தின் சனிமூலை பகுதியில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் வற்றி சிவலிங்கம் வெளியே தெரிந்தால் அந்த பகுதியில் உடனடியாக மழை பெய்து சிவலிங்கம் மூழ்கும் என்பது ஐதீகம். இதனாலே இந்த குளம் வற்றியதே இல்லை என்பது அப்பகுதி கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
