*பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தா.பழூர் : அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சி மைக்கேல் பட்டி பகுதி, முத்துவாஞ்சேரி ஆகிய பகுதியில் இருந்து செம்மண் வெட்டப்பட்டு தஞ்சை கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தினமும் 400 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும் அரியலூர் சிமெண்ட் ஆலை லாரிகள் என தினமும் 600க்கும் மேற்பட்ட லாரிகள் காரைக்குறிச்சி மதனத்தூர் வழியாக கும்பகோணம் பகுதிக்கு செல்கின்றன.
அதிகப்படியான லாரிகள் செல்லக்கூடிய அளவிற்க்கு அந்த பகுதியில் சாலை வசதிகள் இல்லை இருப்பினும் மாற்று வழி உள்ளது அணைக்கரை பகுதி வழியாக புதிதாக போடப்பட்ட பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தூரம் உள்ள காரணத்தால் அனைத்து லாரிகளும் இந்த சாலையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
அதே நேரத்தில் விதிமுறைகளை மீறி பள்ளி நேரத்தில் செம்மண் லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதால் மாணவர்கள் அச்சத்தோடு செல்வதாகவும், அதிக அளவில் விபத்துகளை சந்திப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் காரைக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாலையில் 40 க்கும் மேற்பட்ட செம்மண் லாரிகளை மட்டும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஒரு புறமாக பொதுமக்கள் மறித்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பள்ளி நேரங்களில் லாரிகள் இயங்குவதால் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.
லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாகவும் அதி வேகமாகவும், அதிக சத்தத்துடன் கூடிய ஒலிகளை எழுப்பி செல்வதால் சாலையில் செல்பவர்கள் அச்சப்பட்டு தடுமாறும் நிலையும் ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் மனு அளித்தும் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் இயங்குவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்போது பேசிய பொதுமக்கள் இந்த பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் செம்மண் முறைகேடாக வெட்டப்படுவதாகவும், பள்ளி செல்கின்ற நேரத்தில் லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதால் மாணவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விதிமுறைகளை மீறும் லாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.பொதுமக்கள் நடத்திய சிறை பிடிப்பு போராட்டம் காரணமாக காரைக்குறிச்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
