2 பேருக்கு சரமாரி வெட்டு பெட்ரோல் குண்டு வீச்சில் வீடு தீப்பற்றி எரிந்து நாசம்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள தெற்கு ஆரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (42). இவரும், இவரது சகோதரர் மாரிதங்கம் (44) என்பவரும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதேபோல் மலைகனி (26), அவரது சகோதரர் பாலமுருகன் (39) ஆகியோரும் அதே கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு 4 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் ஏற்பட்ட தகராறில் மலைகனி, பாலமுருகன் இருவரும் சேர்ந்து அரிவாளால் லட்சுமணன் மற்றும் அவரது சகோதரர் மாரிதங்கத்தை தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டி உள்ளனர். இதில் காயமடைந்த 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புகார்களின்பேரில் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லட்சுமணன், மாரிதங்கம் ஆகியோரின் உறவினர்கள், இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் பாலமுருகனின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி வீசினர். இதில் வீடு தீப்பற்றி எரிந்து நாசமானது. அத்துடன் வீட்டின் கதவு, ஜன்னல், கட்டில், டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித்ராஜ் (24), நிதீஷ் குமார் (25), மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த மதன்குமார் (25 ஆகிய 3 பேர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


