சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்த டிட்வா புயல் நேற்று முன் தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் அதன் நகரும் வேகம் குறைவாக இருந்தது. இதன்காரணமாக, வட தமிழக கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்றைய தினம் கனமழை பெய்தது.
குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. முன்னதாக 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. சென்னையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் வலுவிழந்த டிட்வா காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுக்குறையக் கூடும் என்று கூறியுள்ளது.

