வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது: வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் 3 கி.மீட்டரில் இருந்து 8 கி.மீ.ஆக அதிகரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும். கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் சென்னைக்கு மிக அருகில் நிலைகொண்டிருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் நேற்றைய தினம் விடுக்கப்பட்டது.

