Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அன்னமிடும் கைகள்

திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளை அடுத்து அங்குள்ள சிறிய உணவகங்கள், மெஸ்கள் எப்போதும் அட்சயப் பாத்திரங்கள். வயிறு நிறைய சாப்பிட்டாலும் செலவு அதிகம் ஆவதில்லை. பகல் என்றால் காசி விநாயகா மெஸ் மற்றும் பாரதி மெஸ் சாப்பாடு. இரவில் வடிவேலன் மெஸ், கணேஷ் மெஸ் அம்மன் மெஸ், பாலாஜி ஆந்திரா மெஸ், மோனிஷா மெஸ் என்று சுற்று வட்டாரங்களில் பல உணவகங்களில் ருசியான சில அயிட்டங்கள் கிடைக்கும். பாலாஜியில் ஆனியன் ரவா காரச் சட்னி, நெய் தோசை போன்றவை காரம் விரும்பும் என் போன்றவர்களுக்கு தேவாமிர்தங்கள். கணேஷ் மெஸ்ஸில் இடியாப்பம் தேங்காய்ப் பால் ரவா கிச்சடி போன்றவற்றைச் சாப்பிட்டு பசியாறலாம். இதெல்லாம் விட்டு சில நாட்கள் முன்பு அடையாறில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஒரு தோசை சாப்பிட்டேன்.

நூறு ரூபாய். சட்னி, சாம்பார் எதுவும் ருசியாக இல்லை. பின்பொரு நாள் புத்தகக் கடைகளில் எதுவும் கிடைக்காமல் பசியோடு பேக்கரியில் ஒரு ஜாம் கேக் சாப்பிட்டு பாதியை பசுமாட்டுக்குப் போட்டு விட்டேன். மணி மாலை 7 ஆகியும் பாலாஜி கடை திறக்கவில்லை. கணேஷ் மெஸ் போய் அவர்கள் தரும் கெட்டி தேங்காய் சட்னிக்காகவே வீட்டுக்கும் சேர்த்து பார்சல் கட்டி வந்தேன். வீட்டுக்கு வரும் வரை பசி பசி பசி...பொட்டலத்தைப் பிரித்து ரவா கிச்சடி சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் மனமும் வயிறும் சற்றே அடங்கியது. இப்படி வயிற்றில் விழும் அமுதம்தான் இத்தனை வாழ்க்கை களேபரங்களுக்கும் காரணம் என்று யோசித்துப் பார்த்தால் ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற வாலியின் பாடலுக்கு உயிரோட்டமான பொருள் விளங்கும். அன்னமிடும் கைகளை வணங்குவோம்!

எழுத்தாளர் செந்தூரம் ஜெகதீஷ்.

கலக்கலான சூப்

தேவையான பொருட்கள்

2 கைப்பிடி அளவு கறிவேப்பிலை

1 வெங்காயம்

1/2 டீஸ்பூன் சீரகம்

5 பூண்டு பல்

1 பட்டை, கிராம்பு 2, சோம்பு 1 டீஸ்பூன்

1 தக்காளி

1 கப் வேகவைத்த துவரம் பருப்பு

1 டேபிள் ஸ்பூன் நெய்

தண்ணீர் 3 கப்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு மிளகுத் தூள்.

செய்முறை

குக்கரில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கறிவேப்பிலை, வெந்த துவரம்பருப்பு, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். குக்கர் மூடி போட்டு இரண்டு விசில் விடவும். விசில் வந்ததும் மூடியைத் திறந்து வடிகட்டவும். வடிகட்டிய சூப்பில் மிளகுத்தூள் தூவி எடுத்தால் கறிவேப்பிலை சூப் தயார்.