இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றுள்ளது. நேற்று முடிந்த 2வது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் இந்திய அணி 2வது முறையாக தொடரை இழந்துள்ளது. கடந்தாண்டு இந்தியா வந்த நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் வீரர்கள் பாரபட்ச தேர்வு இன்று, நேற்றல்ல... கவாஸ்கர், கபில்தேவ் காலத்தில் இருந்தே தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனாலும், வெளியே தெரியாமல் இருந்த கிரிக்கெட் அரசியல் தற்போது வெளியே தொடங்கியிருக்கிறது. 19 வயதிற்குட்பட்டோர், இந்திய ‘ஏ’ அணி, இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வீரர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட், கடந்த டி20 உலகக் கோப்பையுடன் விடைபெற நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து பாஜ கட்சியின் மாஜி எம்பியும், முன்னாள் துவக்க வீரருமான கவுதம் காம்பிர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
காம்பிர் அணியின் வீரராக இருந்த காலத்திலேயே டோனி, விராத் கோஹ்லி உள்ளிட்ட வீரர்களுடன் மோதல் போக்கை கையாண்டவர். இவர் வந்ததுமே அணியில் பல குழப்பங்கள் நிலவின. தனக்கென ஒரு பயிற்சியாளர்கள் டீமை உருவாக்கினார். இந்திய வீரர்களை அதிகம் அறிந்திடாத டென்சொட்டே போன்றவரை எல்லாம் உதவி பயிற்சியாளராக நியமித்தார். சீனியர் வீரர்களான கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்கு கடும் நெருக்கடி தந்து டெஸ்ட், டி20ல் ஓய்வு பெற வைத்தார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 19 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது. இதில் 10 தோல்வி, 7 வெற்றி, 2 டிராவில் முடிவடைந்துள்ளன. வெற்றி சதவீதம் 36.82. இந்திய பயிற்சியாளர்களிலேயே மிகவும் மோசமானவர் என கருதப்பட்ட கிரேக் சேப்பல் கூட வெற்றி சதவீதம் 38.89 வைத்துள்ளார். காம்பீருக்கு முன்னதாக பணியாற்றிய ராகுல் டிராவிட் 58.33 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளார்.
தடைக்கு பின்னர் தென் ஆப்ரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடந்த நவம்பர், 1991ல் இந்திய மண்ணில்தான் தடம் பதித்தது. அன்றிலிருந்து இந்திய சுற்றுப்பயணம் வந்த அணிகளிலேயே மிகவும் சாதாரண பேட்டிங், பவுலிங் வரிசையை கொண்ட அணிதான் தற்போதைய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த அணியின் டாப் ேவகப்பந்து வீச்சாளர்களான ரபாடா, நோர்ட்ஜே, கோயட்சே போன்ற வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை. மேர்கோ யான்சென் மட்டுமே குறிப்பிடத்தக்க வேகப்பந்து வீச்சாளர். அனுபவம் இல்லாத ஹார்மர், சென்யூரன் முத்துச்சாமி போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு தென் ஆப்ரிக்க அணி, இந்தியாவை வீழ்த்தியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் சென்யூரனை சதம் அடிக்க விட்டது மிகவும் மோசமானது.
சுழற்பந்து வீச்சாளர்களை எளிதில் சமாளிக்கும் இந்திய வீரர்களை சுழலை வைத்தே வீழ்த்தியுள்ளது கவலையளிக்கிறது. டி20ல் சிறப்பாக விளையாடியவர்கள் என்ற தகுதியை மட்டுமே வைத்து, காம்பிர் ‘டிக்’ செய்த அணி மண்ணை கவ்வியுள்ளது.
போட்டி முடிந்ததும், தென் ஆப்ரிக்க அணி தலைமை பயிற்சியாளர் சுக்ரி கோன்ரட் சொன்ன வார்த்தைகள் மிக கடினமானவை. ‘‘இந்திய அணி வீரர்களை மண்டியிட செய்வதற்குத்தான் தாமதமாக டிக்ளேர் செய்தோம்’’ என்றார். அவர் கூற்றில் தவறில்லை. இனி இந்திய அணிக்குத் தேவை மண்டியிட வைக்கும் வீரர்களா, பயிற்சியாளர்களா, அல்லது தலை நிமிரச் செய்பவர்களா? இனியாவது கிரிக்கெட் போர்டு விழித்துக் கொள்ள வேண்டும்...

