Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவையில் பெரும் பரபரப்பு; பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து பெண் எம்பிக்கள் ஆவேசம்: பதில் உரையை ரத்து செய்து விட்டு கிளம்பினார்

புதுடெல்லி: மக்களவையில் பிரதமர் மோடியின் இருக்கையை பெண் எம்பிக்கள் சூழ்ந்து ஆவேசமாக கோஷமிட்டதால் ஏற்பட்ட களேபரம் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்காமலேயே பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச முயன்றார். ஆனால் அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ராகுலை பேச அனுமதிக்க கோரி அமளி செய்த காங்கிரஸ் எம்பிக்கள் உட்பட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மக்களவை கூடியதும் இந்த விவகாரத்தால் அமளி நீடித்தது. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

காந்தி குடும்பத்தினர் பற்றிய புத்தகங்களை அவைக்கு கொண்டு வந்த ஒன்றிய அமைச்சர் நிஷிகாந்த் துபே அவற்றை மேற்கோள் காட்டி பேச முயன்ற போது சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்டார். இந்நிலையில், மாலை 5 மணிக்கு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 5 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், பிரதமர் மோடி உரையாற்ற வந்திருந்தார்.

அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் எம்பிக்கள் சிலர் பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து ஆவேசமாக கோஷமிட்டனர். மேலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை சூழ்ந்து, முதலில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என அமளி செய்தனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி பதில் உரையை ரத்து செய்து விட்டு புறப்பட்டு சென்று விட்டார். இன்று அவர் மாநிலங்களவையில் பதில் உரையாற்றுவார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் சூழ்ந்து ஆவேசமாக முன்னேறியதாக பாஜ எம்பி மனோஜ் திவாரி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள், சீனா விவகாரம் போன்ற விவகாரங்களால் பிரதமர் மோடி பயந்து போய் பதிலளிக்காமல் சென்று விட்டதாக காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.