நொய்டா:மக்களவை செயலக இயக்குனரான கவுரவ் கவுதம்(40) நொய்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஞாயிறன்று தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் கவுரவ் கவுதமின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வீட்டில் இருந்து கவுரவ் எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளதாக நேற்று தெரிவித்தனர். இந்த கடிதத்தில் கடன் விவகாரம் ஒன்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த குறிப்பில் உள்ள விவரங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


