பூட்டு தயாரிப்பாளர் உதவியுடன் தந்தையின் லாக்கரில் ரூ.50 லட்சத்தை திருடி ஓட்டலில் காதலியுடன் உல்லாசம்:குஜராத்தில் பதுங்கியிருந்த மகன் கைது
ஜோர்காட்: தந்தையின் லாக்கரில் இருந்த ரூ.50 லட்சத்தை திருடி காதலியுடன் உல்லாசமாக செலவழித்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அசாம் மாநிலம் ஜோர்காட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், கடந்த 11ம் தேதி குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நேரத்தில் படுக்கையறை லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் திருடு போனது. இதுகுறித்து புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஜோர்காட் சதர் போலீசார், சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். அதில் குடும்ப உறுப்பினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தொழிலதிபரின் மகன் யாஷ் தனுஷ்கா அகர்வால் (25) சம்பவத்தன்று மாயமானது தெரியவந்தது. அவரது செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த அவரது தந்தை, மகனை மீட்டு ஜோர்காட் கொண்டுவந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
கைது செய்யப்பட்ட யாஷ் அகர்வாலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், திருடிய பணத்தில் தனது காதலியான பூபாலி தத்தாவுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் ஐபோன் வாங்கி கொடுத்ததுடன், பல்வேறு நட்சத்திர விடுதிகளில் தங்கி உல்லாசமாக செலவழித்தது அம்பலமானது. இதுகுறித்து யாஷ் அகர்வால் கூறும்போது, ‘எனது நண்பர்கள் ஜிது சோமானி, ரோகித் பிரசாத் ஆகியோரின் பேச்சை கேட்டு பூட்டு தயாரிப்பாளர் உதவியுடன் இந்த திருட்டை செய்தேன். காதலிக்காக ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்தார். தலைமறைவாக உள்ள அவரது 2 நண்பர்களை தீவிரமாக தேடி வரும் போலீசார், இந்த வழக்கில் யாஷ் அகர்வாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.



