ஒவ்வோர் ஆண்டும் கடன் அளவு அதிகரிக்கத்தான் செய்யும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது: இந்த நிதியாண்டில் கடன் அளவு ரூ.11.22 லட்சம் கோடியாக உயரும்: தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் ஒப்புதல்
சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் சித்திக் அளித்த பேட்டி: மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடி. மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் ரூ.27 ஆயிரத்து 835 கோடி. ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.32 ஆயிரத்து 921 கோடி. மத்திய வரி பகிர்வாக ரூ.62 ஆயிரத்து 531 கோடி என மொத்தம் ரூ.3.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வருவாய் செலவினம் ரூ.4.05 லட்சம் கோடி. இதன்மூலம் வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரத்து 775 கோடியாக இருக்கும். மூலதன செலவினங்கள் ரூ.56 ஆயிரத்து 985 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் மொத்த பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி. 200 யூனிட் விலையில்லா மின்சாரம் திட்டத்துக்கு ரூ.1,545 கோடி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ.6 ஆயிரத்து 82 கோடி, மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம்,
பட்டுப்புடவை என அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ.560 கோடி, வெற்றி வீடு திட்டத்துக்கு ரூ.1000 கோடி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ.311 கோடி, ஊரக சாலை புனரமைப்பு திட்டத்துக்கு ரூ.504 கோடி என இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
நிதிநிலை இக்கட்டான நிலையிலும் கடந்த 3 மாதங்களில் பல நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. வருவாயை பெருக்க பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் புதிய கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்கியுள்ளோம். அதன்படி ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு உருவாக்கியுள்ளோம். மேலும் அதை விரிவுப்படுத்தி வருகிறோம். எந்த அளவுக்கு விரிவுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியும்.
இதை ஒரே ஆண்டில் சீர் செய்ய முடியாது. குறைந்தது 2, 3 ஆண்டுகள் ஆகும். பெரிய அளவிலான செலவினங்களை இப்போது எடுத்துக் கொள்வதாகவும் இல்லை. அவ்வாறு எடுத்தால் அரசின் அடிப்படை செயல்களே பாதிக்கும். அதற்கேற்ப இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயை பெருக்கும் வகையில் பதிவுத்துறையில் கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டம் இருக்கிறது. குறிப்பாக வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்கலாம். அது அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் மாறியமைக்கப்படும்.
இதைத் தாண்டி தமிழக அரசின் சொந்த வருவாயை பெருக்க வேறு வழியில்லை. ஒன்றிய அரசிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு வரி நிலுவை உள்ளது. தமிழக அரசின் மொத்த பற்றாக்குறை ரூ.1.22 லட்சம் கோடி. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு (ஜிஎஸ்டிபி) ஒப்பிடுகையில் 3 சதவீதம்தான். அதாவது குறிப்பிட்ட அளவில்தான் உள்ளது. மேலும் இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கடன் வாங்க முடியாது. ரூ.1.22 லட்சம் கோடி 3 சதவீதத்துக்குள் இருப்பதால் அந்த அளவுக்கு நாம் கடன் வாங்க வேண்டி இருக்கும்.
ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. கடனை குறைக்க முடியாது. அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் கடன் அளவு அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கடன் தமிழகத்தின் ஜிஎஸ்டிபிக்குள் இருக்க வேண்டும். அந்த வகையில் ஏற்கனவே உள்ள ரூ.10 லட்சம் கடன் அளவு என்பது ஜிஎஸ்டிபியில் 28 சதவீதமாக உள்ளது. இந்த நிதியாண்டின் முடிவில் இந்த மொத்த கடன் அளவு ரூ.11.22 லட்சம் கோடியாக உயரும்போது அது, ஜிஎஸ்டிபி 27 சதவீதமாக குறையும்.
இவ்வாறு படிப்படியாக குறைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தமிழக அரசின் மொத்த வருவாய் அதாவது ரூ.3.50 லட்சம் கோடியில் இந்த கடன் கணக்கை பார்த்தால் கடந்த நிதியாண்டில் 3.4 மடங்காக இருந்தது. அது நடப்பு நிதியாண்டில் 3.17 மடங்காக குறையும். கடன் வாங்குவதில் தப்பில்லை. அதேநேரம் கடன் வாங்குவதற்கு தகுந்த அளவு வருவாய் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* பட்ஜெட்டில் ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு புதிய கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்கியுள்ளோம்.
* இது எந்த அளவுக்கு விரிவுப்படுத்தப்படுகிறதோ அந்த அளவுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய முடியும். இதை சீர் செய்ய 2, 3 ஆண்டுகள் ஆகும்.
* பெரிய அளவிலான செலவினங்களை இப்போது எடுத்துக் கொள்வதாகவும் இல்லை.
* அவ்வாறு எடுத்தால் அரசின் அடிப்படை செயல்களே பாதிக்கும்.
* டாஸ்மாக் மூலம் கூடுதல் வருவாய்
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.51 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. அது நடப்பு நிதியாண்டில் ரூ.56 ஆயிரம் கோடியாக இருக்கும். அதாவது கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் அதிகரிக்கும் என்று நிதித்துறை செயலாளர் கூறினார்.


