சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் 5,000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. அப்போலோ மருத்துவமனை 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லீரல் பாதிப்புக்கான முன்னோடித்துவமிக்க மருத்துவ கண்டுபிடிப்புகள், சிகிச்சைகள் ஆகியவை வழங்கி வருகிறது. குறிப்பாக 1998ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி இந்தியாவில் குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது அப்போலோ கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் கீழ் 5,001 உறுப்பு மாற்று சிகிச்சைகளை நிறைவு செய்துள்ளது. இதில் 4,391 வயது வந்தோர் மற்றும் 611 குழந்தைகளுக்கான மருத்துவ நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இறந்தவர்களிடமிருந்து உறுப்புத் தானமாக பெறப்பட்ட 700 அறுவை சிகிச்சைகள் மற்றும் 73 கல்லீரல்-சிறுநீரகம் இணைந்த மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைகள் வெற்றியடைந்துள்ளன. தொழில்நுட்பம், பல்வேறு துறைகளின் நிபுணத்துவம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்களின் வலுவான தேசிய அளவிலான ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம், உலகின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக தன்னை அப்போலோ மருத்துவமனை நிலைநிறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:
இந்த சாதனை, இந்திய மருத்துவப் பராமரிப்பில் எது சாத்தியம் என்பதை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 1998 முதல் மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றியைக் கொண்டாடியபோது, மருத்துவ பயனாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தேவைப்படும் உலகத் தரத்திலான தீர்வுகளை எளிதில் கிடைக்கவேண்டும் என்ற ஒரு எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டேன்.
5,000 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்ற புதிய மைல்கல்லை தாண்டியிருப்பது, என்னுடைய அந்தக் கண்ணோட்டத்திற்கு சான்றாகவும், அர்ப்பணிப்புமிக்க எங்களது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் அயராத உழைப்புக்கும், முயற்சிகளுக்கும் கிடைத்திருக்கும் பெரும் கவுரவமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
