கல்லீரல் புற்றுநோயில் இருந்து மீண்ட நிலையில் எம்.ஆர்.ஐ பரிசோதனையில் கதறிய நடிகை தீபிகா: 2 சிறிய புள்ளிகள் இருப்பதால் மீண்டும் கவலை
மும்பை: கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை தீபிகா கக்கர், எம்.ஆர்.ஐ பரிசோதனையின் போது பயத்தில் அழுததாக அவரது கணவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சின்னத்திரை நடிகை தீபிகா கக்கருக்கு கடந்தாண்டு இரண்டாம் கட்ட கல்லீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர், கல்லீரல் அருகில் நீர்க்கட்டி கண்டறியப்பட்டு மற்றொரு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கமான எம்.ஆர்.ஐ பரிசோதனைக்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்ட பயம் மற்றும் பதற்றம் குறித்து யூடியூப் வீடியோவில் தீபிகா பகிர்ந்து கொண்டார். அதில், ‘எனக்கு மிகவும் பயமாக இருந்தது. பரிசோதனை இயந்திரத்திற்குள் செல்வதற்கு முன்பும் அழுதேன். இயந்திரத்தின் உள்ளே இருக்கும்போதும் அழுதேன்’ என்று கூறினார். அப்போது அவரது கணவர் சோயிப் இப்ராஹிம் கூறுகையில், ‘எம்.ஆர்.ஐ பரிசோதனையில் இரண்டு மிகச்சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்தார்.
இந்த புள்ளிகள் மிகவும் சிறியதாக இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை எதுவும் செய்ய தேவையில்லை என்றும், தொடர்ந்து பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தீபிகா கக்கருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இம்யூனோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வரும் அவருக்கு, புதிதாக கட்டிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், அவரது உடல்நலம் குறித்த தகவல்கள் தற்போது மீண்டும் இணையத்தில் பரவி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
