தண்டையார்பேட்டை: காசிமேடு எஸ்.என்.செட்டி சாலையில், இந்திரா நகர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைப்பதாக ஏற்கனவே போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
ஆனால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு இந்திரா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எஸ்.என்.செட்டி சாலை குழந்தைகள் நல காப்பகம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, காசிமேடு காவல் ஆய்வாளர் மைனர்சாமி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மொட்டை மாடியில் மது அருந்துவது யார், என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். அதில், காசிமேடு இந்திரா நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மனோஜ் (20), சூர்யா (18), ஜீவரத்தினம் சாலையை சேர்ந்த சாருன் (21), சுஜித் (19) மற்றும் 6 சிறுவர்கள் உட்பட 9 பேர், வீட்டு மாடியில் மது அருந்தியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.



