Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வெல்வதற்கே வாழ்க்கை!

பிரச்சனைகளைக் கண்டு பின்வாங்காமல் ஒரு தீயணைப்பு வீரனைப் போல செயல்படுங்கள். அதென்ன தீயணைப்பு வீரனைப் போல செயல்பட வேண்டும்? என்று தானே கேட்கிறீர்கள்.கட்டிடத்தில் தீப்பிடித்து விட்டது என்றால் எல்லோரும் பதறியடித்து வெளியே ஓடுவார்கள். ஆனால் தீயணைப்பு வீரர் உள்ளே ஓடுவார். அவர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களில் முக்கியமானது எதுவென்றால், தன்னுடைய உயிருக்கோ, உடைமைக்கோ பாதிப்பு உண்டாகாமல் கவனமாக இருப்பது. இரண்டாவது, தீக்குள் சிக்கியுள்ளவர்களின் உயிர் முக்கியம். அடுத்தது தீப்பிடிக்கும் பொருட்களை அகற்றுவது என கூறலாம்.ஆகவே, பிரச்னையைக் கையாளத் தொடங்குவதற்கு முன்.. ஒரு முன் தயாரிப்பு அவசியம். மருத்துவர் எவ்வாறு அறுவைசிகிச்சைத் தொடங்குவதற்கு முன்னர் அதற்கு தேவையான உபகரணங்கள், மருந்துகள், உதவியாளர்கள் என முன்கூட்டியே தயார் செய்ததுடன், நோயுற்றவரையும் தயார்படுத்துகிறார் அல்லவா? அதுபோலவே... பிரச்னையைக் கையாளும் முன்னர் அல்லது அது குறித்த தீர்வுகளை அலசும் போது, அதற்குரிய ஆயத்தங்களை முன்னேற்பாடாக செய்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக முயற்சித்தால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கு இந்தக் கதை உதாரணம். கடுமையான வறுமையால் சாப்பிட பணம் இல்லாமல் உடல் வலிமை இழந்தபோதும் மன வலிமையால் சாதித்தவர்கள் ஏராளம். வயிறார சாப்பிடக்கூட முடியாத வறுமையிலும் சிலர் தங்கள் மனோ சக்தியை உபயோகித்து உலகமே பிரமிக்கக்கூடிய சாதனைகளை புரிந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் மேரிகியூரி என்னும் பெண்மணி. இவர் சிறுவயதில் ஒரு பணக்கார குடும்பத்தில் வீட்டு வேலைகளை செய்து வந்தார். இவர் வசித்த அறைக்கு ஜன்னல்கள் கிடையாது. ஒரே ஒரு கதவு தான் இருந்தது. அதிலேயே வெளிச்சமில்லை, வெப்பமும் இல்லை. இரவு நேரத்தில் குளிர் தாங்க முடியாது. நாற்காலியின் கீழே பதுங்கிக் கொண்டு படுத்துக் கொள்வாராம்.

பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது சாப்பாட்டுக்கு பணம் இல்லாமல் பசி தாங்க முடியாமல் மயங்கி விடுவாராம். அப்போதும் தன் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியை விடவில்லை. தொடர்ந்து செய்த ஆராய்ச்சியின் பலனால் புற்றுநோயை போகக்கூடிய ரேடியத்தை கண்டுபிடித்த பெருமை இவருக்கு உண்டு. அது மட்டுமல்ல, பௌதிக மற்றும் இரசாயன ஆராய்ச்சிக்கான நோபல் பரிசும் பெற்றார். இந்த பரிசை இரண்டு முறை வாங்கியவர் என்ற பெருமை உலகிலேயே இந்த பெண்மணியை மட்டுமே சாரும்.இனி நமக்கு வாழ்க்கையே கிடையாது என்று மனம் உடைந்து நடைப்பிணமாகக் காட்சி அளிக்க வேண்டிய பரிதாப நிலையை அடைந்தவர்கள் தனது ஊக்கத்தையும், மன உறுதியும் கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

சிலருடைய கஷ்டம் நிறைந்த வாழ்க்கையை பார்க்கும்போது இவர்கள் எப்படித்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சிறந்த வெற்றியாளராக உருவாகியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். இனி நமக்கு வாழ்க்கையே இல்லை என்ற நிலையில், ஒருவர் நெஞ்சில் உறுதியும், தன்னம்பிக்கையும், துணிச்சலும் இருந்தால் கட்டாயம் வெற்றி பெறலாம் என்று நிரூபித்து காட்டியுள்ளார்கள் பலர். அதில் ஒருவராக இந்த சாதனை பெண்மணியையும் சொல்லலாம்.

யூ.பி.எஸ்.சி சிவில் சர்வீஸ் தேர்வு இந்தியாவின் மிக கடினமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தேர்வுக்கு தகுதி பெற நீங்கள் முழு கவனத்தையும் தேர்வுக்கு தயாராகுவதில் செலுத்த வேண்டும். பல மணி நேரம் தேர்வுக்கு தயாராக வேண்டிய சூழலும் ஏற்படும்.சில சமயங்களில் குடும்பத்தினரை விட்டு விடுதியில் தங்கி பயிற்சி எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். அதேபோல குடும்பத்தில் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளையும், சோதனைகளையும் தாண்டி யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக உருவாகுபவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் மோகா நகரத்தைச் சேர்ந்தவர் ரித்திகா ஜிண்டல். சிறுவயதிலிருந்தே படிப்பில் படு சுட்டியான ரித்திகா சிபிஎஸ்இ வாரியம் நடத்தும் 12 ம் வகுப்பு தேர்வில் வட இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.இதனையடுத்து டெல்லி ராம் வணிகவியல் கல்லூரியில்பட்டப்படிப்பு மேற்கொண்டார். கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடிக்கும்போதே குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கு சுயமாகத் தயாரானார். பயிற்சி மையத்துக்கு செல்லாமலே கடினமாக உழைத்து யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொள்ள ஆயத்தமானார்.இதற்கிடையில் எதிர்பாராத விதமாக அவரது தந்தைக்கு சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையைப் பராமரித்துக் கொண்டே குடிமைப்பணி தேர்வுக்கும் படித்து வந்தார்.

முதல் முயற்சியில் வெற்றி கை நழுவிப்போனது. 2019-ல் இரண்டாம் முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் வாகை சூடினார். தனது 22-ம் வயதில் தேசிய அளவில் 88-வது இடத்தை பிடித்து இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் வெற்றிகரமாக இடம்பிடித்தார். ஆனால், ஐஏஎஸ் பயிற்சி காலத்தில் உடல் நலிவடைந்த தனது தாயையும் பறிகொடுத்தார். தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையிலும் சோதனைகளை தாங்கிக் கொண்டு யுபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்து, தற்போது இமாச்சல பிரதேசம் பங்கி பகுதியில் பிராந்திய ஆணையராக பணிபுரிந்துவருகிறார்.யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்தது குறித்து ரித்திகா ஜிண்டல் கூறியதாவது எனது தந்தை புற்றுநோயை எதிர்த்து உயிர் வாழ நடத்திய போராட்டத்தை யுபிஎஸ்சி தேர்வுக்கான தயாரிப்பு நாட்களில் நான்கண்கூடாகப் பார்க்க நேர்ந்தது.அது மிகுந்த கவலை நிறைந்த காலகட்டம். இருந்த போதும் நம்பிக்கையுடன், மன வலிமையுடன் கடின உழைப்பை செலுத்தித்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டுதான் இருந்தேன்.

குடும்பத்தில் ஏற்பட்ட சோதனைகளை எல்லாம் தாண்டி சாதனை படைத்த ஐஏஎஸ் அதிகாரி ரித்திகா ஜிண்டாவின் உத்வேகமான கதை யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்க கூடிய ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்கும் உன்னத பாடமாகும். இக்கட்டான சூழலில் மன உறுதியுடன் நம்பிக்கையும் சேர்த்துக்கொண்டு புன்னகையுடன் போராடக் கற்றுக் கொள்ளுங்கள். மன உறுதி மற்றும் நம்பிக்கை உடையவர்கள் எப்போதும் தோற்றுப் போவதில்லை என்று திரும்ப திரும்ப மனதில் பதியச் செய்யுங்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் நீங்கள் தான் வெற்றியாளர்.