Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை; ரியலாக வெற்றி பெற கல்வியே கைகொடுக்கும்: மாணவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அட்வைஸ்

காரைக்குடி: ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை. ரியலாக வெற்றி பெற வேண்டும் என்றால் கல்வி தான் கைகொடுக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2025-2026ம் ஆண்டுக்கான சைக்கிள் வழங்கும் திட்டம் துவக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா மற்றும் குழந்தைகள் தினவிழா என முப்பெரும் விழா நேற்று நடந்து.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சைக்கிள் மற்றும் விருதுகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 5.35 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்க உள்ளோம். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சியை சமீபத்தில் அரசு நடத்தியது. நீங்கள் டி.வியில் பார்த்து இருப்பீர்கள். கல்வி எந்த அளவில் ஒவ்வொருவரின் வாழ்விலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருப்பீர்கள். கல்வி என்பது ‘பவர்புல்’ விஷயம். பொருள், பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல கல்வி. கான்பிடன்ட், பவரை கொடுப்பது தான் கல்வி. இதனால் தான் இந்தியாவிலேயே கல்விக்காக அதிக திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக, கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. இன்னும் உலகநாடுகளுடன் போட்டி போடுகின்ற நிலைக்கு நமது மாநிலத்தை உயர்த்த வேண்டும். உங்களது கல்வி வளர்ச்சிக்காக முதல்வர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். நீங்கள் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் ரீல்ஸ் பார்க்கிறீர்கள். அந்த ரீல்ஸ் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதில் வருபவை பெரும்பாலும் பொய். அதனால் தான் அதற்கு பெயர் ரீல்ஸ். ரியலாக வெற்றி பெற வேண்டும் என்றால் கல்வி தான் உங்களுக்கு என்றும் கை கொடுக்கும்.

கல்வியுடன் சேர்ந்து விளையாட்டிலும் ஆர்வம் செலுத்த வேண்டும். கல்வியில் முன்னேறினால் உங்களது குடும்பம் பொருளாதாரத்தில் நிச்சயம் முன்னேறும். அப்படி முன்னேறும்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறும். அந்த முன்னேற்றத்தை கல்வியில் இருந்து தான் துவங்க முடியும். இவ்வாறு பேசினார்.

துணை முதல்வர் கூறிய குட்டி கதை

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குட்டிக்கதை சொன்னார். அதன் விவரம் வருமாறு: ஒரு யானை பாகன் அவருடைய யானையை, ஒரு சின்ன கயிறு மூலம் கட்டி வைத்திருந்தார். அதனை பார்த்த அந்த பக்கமாக வந்த சுற்றுலாப்பயணி, ‘இவ்வளவு பெரிய யானையை இவ்வளவு சின்ன கயிற்றால் கட்டி போட்டு வைத்துள்ளீர்களே? யானை அந்த கயிறை அறுத்து விட்டு ஓடி விடாதா’ என பாகனிடம் கேட்டார். அதற்கு பாகன், ‘இந்த யானை குட்டியாக இருக்கும் போது இந்த கயிற்றை வைத்து கட்டி போட்டு வைத்து இருந்தேன். அது தற்போது வளர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக பெரிதாக ஆகிவிட்டது. இருந்தும் அதே கயிற்றால் நான் கட்டி போடுகிறேன். குட்டியாக இருந்தபோது அறுக்க முடியாத கயிற்றை இப்போதும் அறுக்க முடியாது என அந்த யானை இன்னும் நினைத்துக் கொண்டு உள்ளது’ என கூறினார்.

நமது மனித மூளையும் அதுபோன்று தான். நமக்கு இது எல்லாம் வராது, நமக்கு இதையெல்லாம் செய்ய முடியாது என யாரும் நினைத்து விடக்கூடாது. அப்படி நினைத்தால் நமக்கும் அந்த யானையின் நிலைதான். நாம் அனைவரும், குறிப்பாக மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு உங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.