Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!

கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கவிருக்கின்றன. எங்கும் புத்தகங்கள், நோட்டுகளுக்கு அட்டை போடும் ரீல்ஸ்கள் கண்ணில் படுகின்றன. ஒரு மாதத்திற்கும் மேல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு என்பது நிச்சயம் பல குழந்தைகளுக்கு வருத்தமாகவும், முதல் முறை பள்ளிக்குச் செல்லும் பிரைமரி பள்ளிக் குழந்தைகளுக்கு அழுத்தமாகவும் இருக்கும். இதைக் காட்டிலும் பெற்றோர்களுக்கு அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். இந்த ஒருவாரம் பல பள்ளிகளில் விளையாட்டு, கலந்துரையாடல், என நகர்ந்திருந்தாலும் இதே போல் தொடர்ந்து இருப்பதும் கடினம். எனவே வகுப்புகள், வீட்டுப்பாடங்கள், டியூஷன்கள் என துவங்க இருக்கும் பரபரப்பான சூழலை மனரீதியாகவும், மகிழ்ச்சியாகவும் அணுகுவது எப்படி. ஆலோசனைகள் கொடுக்கிறார் மருத்துவ உளவியலாளர் டாக்டர்: எஸ்.வந்தனா.

‘எக்காலத்திலும் பேசப்பட வேண்டிய, தேவையான விஷயம் இந்த பள்ளிகளுக்கும், குழந்தைகளுக்குமான பந்தம். பொதுவாகவே பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைப் பிடிக்காத ஒன்றாகத்தான் அணுகுகிறார்கள் எனில் இன்னும் பள்ளிகளில் மாற்றம் பெற வேண்டிய சூழல் இருக்கத்தான் செய்கிறது. பள்ளிகள் எப்போது திறக்கும் என பெற்றோர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு குழந்தைகளிடம் பார்ப்பது அரிதே. குறிப்பாக இதற்கு அங்கே அமையும் நண்பர்களின் சூழலும் மிக முக்கியம். வீட்டில் இருப்பதை விட சுவாரஸ்யமான மனநிலை கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வர ஆசைப்படுவார்கள். ஏன் வளர்ந்த மனிதர்களான நாம் எல்லோருமே பள்ளிக் காலங்களைத்தான் பசுமையான காலங்களாக எக்காலத்திலும் ஞாபகத்தில் வைத்திருந்து சொல்வோம். என்கையில் பள்ளிக்குச் செல்லும் காலத்திலேயே அதன் அருமையை உணர்த்தி, அவர்களை மகிழ்வாக அனுப்ப வேண்டியதில் முக்கியப் பங்கு பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது என்னும் டாக்டர் எஸ். வந்தனா இரண்டு வகையான குழந்தைகள் அவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஆலோசனைகள் பகிர்ந்தார்.

‘ஒன்று ஏற்கனவே பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும் குழந்தைகள், மற்றொன்று முதல் முறையாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள். பெரும்பாலும் வீட்டில் இருக்கும்போது மொபைல், டிவி, அதிக விளையாட்டு, நினைத்தது கிடைக்கும் போன்ற சூழலில் இருக்கும் குழந்தைகள்தான் பள்ளிக்குச் செல்வதை விரும்பாத சூழலாகவும், இன்னும் கொஞ்சம் அதிகம் விடுமுறை கிடைத்திருக்கலாம் என்கிற மனநிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. விடுமுறையானாலும் மொத்தமாக அவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல் கூடுமானவரை கோடைகால பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள், பொதுஅறிவு, பெரியவர்களின் அறிவுரைகள், பெற்றோர்களின் வீட்டு வேலைகளில் உதவிகள் என சரிசமமாக அவர்களுக்குக் கொடுக்கும் போது பள்ளியின் சூழலுக்கும், வீட்டின் சூழலுக்கும் பெரிதான வித்யாசம் இருக்காது. இதனால் பள்ளி திறக்கும் போது அவர்களே சந்தோஷமாகக் கிளம்புவார்கள்.

பிரைமரி குழந்தைகள் வேறு வழியே இல்லை, அவர்கள் பெற்றோர்களின் கைக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தவர்கள், பள்ளியில் சேர்க்கும்போது அவர்கள் அழுவதையும், பிரிவதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் சிறு வயது முதலே பள்ளி என்றால் சந்தோஷம், நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், விளையாட்டு இருக்கும், புது உடைகள், பைகள், பேக் இவைெயல்லாம் கிடைக்கும் என்னும் நேர்மறையான மனநிலையைக் கொடுத்துக் கொண்டிருந்தாலே பிரைமரி குழந்தைகளும் பள்ளிகள் மேல் ஆர்வம் காட்டுவார்கள் பள்ளிகள் என்ன செய்ய வேண்டும் மேலும் தொடர்ந்தார் எஸ். வந்தனா.

‘சமூக அறிவியல் அல்லது தத்துவங்கள் (Moral Science)… இப்போதெல்லாம் பல பள்ளிகளில் இந்த வகுப்பே இல்லை. ஒரு சில கல்லூரிகள், பள்ளிகளில் மதிப்புக் கல்வி (Value Education) என்கிற பெயரில் இந்த வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதாவது வாழ்க்கைக்குரிய முதுமொழிகள் அல்லது தத்துவங்கள்(Proverb) குறித்த பாடங்கள். தினம் ஒரு குழந்தை வீதம் அவர்கள் பெற்றோர்களிடம் ஏதேனும் முதுமொழி தெரிந்துகொண்டு வரச்செய்து அதற்குரிய கதைகள் , கலந்துரையாடல்கள் கொடுக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகை. ஒருவழிக் கல்விமுறையான கரும்பலகை, புத்தகம்கொண்டு எடுக்கப்படும் வகுப்புகள் என்பது பெரும்பாலும் எல்லா குழந்தைகளுக்கும் மனதில் ஏறாத பட்சத்தில் வகுப்பெடுக்கும் முறைகளை மாற்றலாம். ஒரு நாள் இரு குழுவாக பிரித்து அவர்களுக்குள்ளேயே தீர்வுகளைக் காணசெய்தல். பாடங்களை கதைகள் வழியாக சொல்லிக் கொடுத்தல் முறைகளைக் கையாளலாம். எப்படி இன்று வகுப்பை ஆரம்பிக்கலாம், என குழந்தைகளிடமே கேட்டு அவர்கள் சொல்லும் ஆலோசனைகளைப் பரிசீலித்தால் இன்னும் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாகவே பள்ளிகள் திறந்தவுடன் வகுப்புகள், பாடத்திட்டங்கள் என இயந்திரம் போல் அல்லாமல் ஓரிரு நாட்கள் அவர்களை தயார்படுத்தி, கோடை விடுமுறையில் என்ன செய்தார்கள், போன்ற கலந்துரையாடல்கள், சில விளையாட்டுகள், வார்த்தைப்புதிர்கள் எனக் கொடுத்து ஆரம்பித்தால் அத்தனைக் குழந்தைகளும் பள்ளிகளுக்கு வர அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.

- ஷாலினி நியூட்டன்.