நடப்பாண்டுக்கான மிக நீண்ட சட்டமன்ற கூட்டத்தொடர் இதுதான். கிட்டத்தட்ட 35 நாட்கள். அதில் விடுமுறை தினங்களை கழித்தால் 24 நாட்கள் வரை இக்கூட்டத்ெதாடர் நடக்கும். அதேநேரம் இத்தனை நாட்கள் நடக்கும் கூட்டத்தொடரை, ஒரு சிறப்பாக வழி நடத்தி கொண்டு போக வேண்டிய தவெக அரசு, மிகப்பெரிய தடுமாற்றமடைந்து ஏமாற்றத்தையே தந்துள்ளது.
ஜனநாயக முறைப்படி வாக்களித்து மக்களால் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 227 பிரதிநிதிகள் (ராஜினாமா செய்த 7 பேர் போக), தங்கள் குறைகளை, பிரச்னைகளை பேச முடிந்த ஒரு தொடராக இக்கூட்டத்தொடர் அமையாதது துரதிருஷ்டமே. ஒவ்வொரு துறை மீதான விவாதத்தின்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பெரும்பாலும் பதிலளிப்பதில்லை. அதற்கு பதிலாக ‘முதல் பெஞ்ச் முதல் மதிப்பெண் மாணவர்’ போல, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அடிக்கடி எழுந்து எழுந்து பேசுகிறார். தெரிந்த விஷயத்தை விளக்குவது தவறில்லை.
ஆனால், பிரச்னையை கடந்த திமுக ஆட்சியோடு ஒப்பிட்டு, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அவர் கூறுவதால் பேரவையில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய பல விஷயங்கள், அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டன. ஐபிஎல் போட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரவிய வீடியோ குறித்து பேசும்போது, அமைச்சர் சரத்குமார் உரிய பதிலளிக்கவில்லை.
இதுபோன்ற வேளாண் துறை பற்றிய கேள்விகளுக்கு, பிற அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். இப்படி துறை சார்ந்த கேள்விகளுக்கு உரிய அமைச்சர்கள் பதில் தராமல் இருப்பது, பிரச்னையை மடை மாற்றி விடும் வேலைதான் நடக்கிறது. இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான பிரேமலதா பேசும்போது, ‘பல மணிநேரம் யோசித்து மக்கள் தயார் செய்து வரும் மக்கள் பிரச்னைகளை பேச நேரம் கிடைப்பதில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது பிரச்னை எழுகிறது.
அதன்பிறகு, அதனாலேயே 4 மணி நேரம் பிரச்னை செல்கிறது. தனிப்பட்ட விஷயங்களை பொதுக்கூட்டங்களில் பேசுங்கள். இங்கு வேண்டாம்’ என குறிப்பிட்டார். பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளிப்பதில்லை. அதை விட்டு உங்க ஆட்சியில் இதை செய்யவில்லை என கூறும்போது, இந்த விவாதம் தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்றார்.
நேற்று முன்தினம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 9 மணி 50 நிமிடம் சட்டப்பேரவை நடந்துள்ளது. இதில் கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் 3 துறைகள் மீது விவாதம் நடைபெற்றது. ஆனால், இதில் மொத்தமே 13 எம்எல்ஏக்கள் மட்டுமே பேசியுள்ளனர். துறை அமைச்சர்களின் பதிலுரையும் இடம் பெறவில்லை. இடைவெளியின்றி நீண்ட நேரம் நடந்த கூட்டத்தொடரில் குறைந்த எம்எல்ஏக்களே பேசியிருப்பதன்மூலம், பலரது வாய்ப்புகள் வீணடிக்கப்படுகின்றன என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
இன்னும் 7, 8 நாட்கள் மட்டுமே மீதமுள்ள இந்த தொடரில் இனியாவது, அமைச்சர்கள் கடந்த அரசின் மீது குற்றம் சுமத்தி காலம் கடத்தாமல், மக்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசியும், பிற எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து, பேரவைக்கான மாண்பை காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் நேரலையில் பார்வையிடும் மக்கள், நம் பிரதிநிதி நமக்காக பேசுகிறார் என்ற எண்ணமும் ஏற்படும். இனியாவது, சட்டப்பேரவையில் ஒரு மாற்றம் நிகழும் என எதிர்பார்ப்போம்.



