நாட்டில் தற்போது தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது தொகுதி மறுவரையறை மசோதா ஆகும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி அவசர அவசரமாக ஒன்றிய பாஜ அரசு இரு மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் நடைமுறையில் உள்ள நிலையில் பெரிய எதிர்ப்பு இருக்காது என்று திட்டமிட்டு ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரமும் செய்வோம், தமிழருக்கும், தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பாதக செயல் என்றால் எதிர்த்து உரிமைக்குரல் கொடுப்போம் என்று கருப்பு சட்டை அணிந்து வீடுகள் தோறும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்தும் கரு்ப்புக்கொடி ஏற்றியும், மசோதாவின் நகலை எரித்தும் போராட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். இந்த போராட்ட தீ நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவ வேண்டும்.
மாநில சமநிலைக்கு பாதகம் விளைவிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற்றே தீர வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. 543 நாடாளுமன்ற தொகுதிகளை 850க்கும் மேற்பட்ட தொகுதியாக உயர்த்தி அதில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கொடுப்பதை விட தற்போதுள்ள எண்ணிக்கையிலேயே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆதரவளிப்பதாக திமுக கூறுகிறது.
தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநில தொகுதிகள் மிக குறைவாகவும், வடமாநிலங்களில் மிக அதிகமாகவும் உயர்கிறது. இதனால் நாடாளுமன்றத்தில் வடமாநிலத்துக்கே முழு பிரதிநிதித்துவம் கிடைக்கும். தென்மாநிலங்களின் குரல்வைளையை நெரிக்கவே திட்டமிட்டு பாசிச பாஜ அரசு இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதை கண்டித்துள்ள தமிழக முதல்வர் ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்.
தமிழரை சொந்தநாட்டில் அகதிகளாக்கும் கருப்பு சட்டத்தின் நகலை எரித்து மீண்டுமொரு தீயை பற்ற வைத்துள்ளேன். பாஜவின் ஆணவம் அழியும் வரை போராட்டம் தொடரும். ‘தமிழ் எங்கள் பிறவிக்கு தாய், இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ’ என்று பதவிட்டு தமிழ் சமுதாய மக்களிடம் உணர்வுத்தீயை மூட்டியுள்ளார்’. இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் 333 எம்பிக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் வாக்குசீட்டு முறையில் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை தாக்கல் செய்ய தேவையான ஆதரவை ஒன்றிய அரசு பெற்றுவிட்டது. இந்த மசோதா விவாவதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 3 நாள் சிறப்பு கூட்டத்தில் ஒன்றிய அரசு நினைத்ததை சாதிக்க முடிவு செய்துள்ளது.
தேர்தலில் வாக்கு சேகரிப்பை விடுத்து தமிழர்கள் உரிமைக்கு பிரச்னை என்றதும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலி்ன் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு நலனுக்காவும், தமிழர்கள் உரிமைக்காகவும் அப்போதும், இப்போதும், எப்போதும் போராடும் ஒரே கட்சி திமுக தான் என்று மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள். திமுகவின் போராட்டத்ைத வெற்றி பெற செய்ய மக்கள் கரம் கோர்க்க தயாராகிவிட்டார்கள்.
