சென்னை: சென்னை மாவட்டத்தில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்சினைகள் மற்றும் குறைகள் தொடர்பாக பொதுமக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மனுக்கள் குழுவுக்கு நவம்பர் 17-ம் தேதிக்குள் மனுக்களை அனுப்பலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2026-2027-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு, தலைவர் சபரிநாதன் தலைமையில் சென்னை மாவட்டத்தில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளது.
சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தனிநபர்கள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள், தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்னைகள் மற்றும் குறைகள் தொடர்பாக மனுக்களை அனுப்பலாம். மனுக்கள் தமிழில் மட்டும் 3 நகல்களாகத் தயாரிக்கப்பட்டு, மனுதாரர் அல்லது மனுதாரர்கள் தேதி குறிப்பிட்டு கையொப்பமிட்டு, தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு நவ. 17-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம். ஒவ்வொரு மனுவிலும் ஒரே ஒரு பிரச்னை மட்டுமே இடம்பெற வேண்டும். அந்தப் பிரச்னை ஒரே ஒரு அரசுத் துறையைச் சார்ந்ததாகவும், பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
தனிநபர் குறைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு இலவச உதவிகள் கோருதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் கோருதல், அரசுப் பணியிட மாற்றம் கோருதல், அரசு அலுவலர்கள் மீதான குறைகளைத் தெரிவிக்கும் மனுக்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. குழு ஆய்வு செய்யும் நாள் குறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் தனியாகத் தகவல் அனுப்பப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


