சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை விருப்ப மனுக்களை தரலாம்: 234 தொகுதிகளிலும் விண்ணப்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார், இன்று முதல் வரும் 15ம்தேதி வரை விருப்ப மனுக்களை தரலாம் என்றும் 234 தொகுதிகளிலும் கட்சியினர் விண்ணப்பிக்கலாம் என்றும் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் களம் மெதுமெதுவாய் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை நியமித்தது. இந்த குழு திமுக கூட்டணி தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல் கட்ட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்நிலையில், வரும் 2026ம் சட்டப் பேரவையில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் 234 தொகுதிகளிலும் கட்டணமில்லா விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை இன்று (10ம்தேதி) முதல் வரும் 15ம்தேதி வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள், ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான வரும் 15ம்தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


