லக்னோ: உபியில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் 5 இடங்களில் பாஜ 5 இடங்களில் வெற்றி பெற்றது.சமாஜ்வாடி கட்சி 3 இடங்களை கைப்பற்றியது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உபி, பீகார்,மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளில் இருந்து சட்ட மேலவைகளுக்கு உறுப்பினர்களை(எம்எல்சி) தேர்ந்தெடுக்க கடந்த 23ம் தேதி தேர்தல் நடந்தது. உபி.மாநிலத்தில் 11 இடங்கள், பீகாரில் 8 இடங்களில்,மகாராஷ்டிராவில் 5 இடங்கள், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும் வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடந்தது.
மொத்தம் உள்ள 28 இடங்களுக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உபியில் 5 இடங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி 3 இடங்களை கைப்பற்றியுள்ளது.மேலும் 3 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில்,வாரணாசி மற்றும் லக்னோ பட்டதாரி தொகுதிகளில் சமாஜ்வாடி முன்னிலையில் இருக்கிறது.
பீகாரில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 5 இடங்களில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், பாஜ,ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு),ஆர்ஜேடி கட்சிகள் தலா ஒரு இடத்தையும் ஒரு இடத்தில் சுயேச்சையும் வெற்றி பெற்றுள்ளனர். புதிதாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி முதன் முறையாக எம்எல்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜ 3 இடங்களிலும், எதிர்க்கட்சியான என்சிபி(சரத் சந்திர பவார்) 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 2 பட்டதாரி, 2 ஆசிரியர் தொகுதிக்கான இடங்களில் 3 இடங்களில் பாஜவும், ஒரு இடத்தை அதன் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சியும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது.
எம்எல்சி தேர்தல் முடிவுகளால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் என சொல்லிவிட முடியாது. சட்ட மேலவை முடிவுகள் அப்படியே சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அவசியம் இல்லை.
அதேநேரம் இந்த தேர்தல் முடிவுகளை வைத்து, காங்கிரஸ் அரசு மீதான விமர்சனங்களை பாஜ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர்
சட்டமேலவை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காததை கிண்டல் செய்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ‘‘உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார், கர்நாடகம் ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 தொகுதிகளுக்கு மேலவைத் தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல்கள் வாக்குச் சீட்டுகள் மூலம் நடத்தப்பட்டன.காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்று யூகியுங்கள்? என்று கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு அரசை பாதிக்காது
சட்ட மேலவைத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பேசிய அமைச்சர் பிரியாங்க் கார்கே, ஜனநாயகத்தில் மக்களின் முடிவை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலும் ஒரு விழிப்புணர்வு அழைப்பாகும். எந்தவொரு தேர்தலின் முடிவையும் நாம் முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாது. இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்தின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கின்றன என்று நான் கருதவில்லை என்றார்.


