Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையில் பாம்புக்கடி பிரச்சனையால் எழுந்த விவாதம்: நாகதோஷம் - ஜலதோஷம் விவகாரத்தில் அவையில் கலகலப்பு; அமைச்சர்களுக்கு உதயநிதி, ஓபிஎஸ் பதிலடி

சென்னை: சட்டப்பேரவையில் பாம்புக்கடி சிகிச்சை குறித்த விவாதத்தின்போது நாக தோஷம் மற்றும் ஜலதோஷம் என ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதால் பெரும் சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கேள்வி நேரத்தின்போது பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பாம்புக்கடி சிகிச்சை வசதி தொடர்பாக தொடங்கிய விவாதத்தைத் தொடர்ந்து, பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது குறித்து அடுத்தடுத்து அடுக்கடுக்கான துணைக் கேள்விகளை எழுப்பினர். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விரிவான பதில்களை அளித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு கேள்வி நேரம் தொடங்கி சுமார் 29 நிமிடங்கள் வரை தொடர்ந்து பாம்புக்கடி சிகிச்சை குறித்தே நீண்ட விவாதம் அவையில் நடைபெற்றது.

அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், ‘கேள்வி நேரம் ஆரம்பித்து 29 நிமிடங்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாம்புக்கடி பற்றியே நீண்ட விளக்கம் அளித்து வருகிறார். பல தொகுதிகளில் நாக தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். எனவே, நாக தோஷம் கழிப்பதற்கு ஏதேனும் பிரார்த்தனைகள் இருந்தால் அமைச்சர் அதை பேரவைத் தலைவருக்கு நடத்திக் காட்ட வேண்டும். அமைச்சர்கள் விரும்பினால் இந்த தோஷத்தை கழிக்க ஆட்களை அனுப்பி வைப்பேன்’ என்று நகைச்சுவையாக பேசினார். இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், ‘முதல்வர் தலைமையிலான அரசு அறிவியல்பூர்வமானது. தோஷம், பில்லி சூனியத்தில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை. இப்போது ஜலதோஷம்தான் அதிகமாக இருக்கிறது’ என்று கூறினார். தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘பெரியார் வழியில் வந்த நாங்கள் இந்த பிரச்னையை அறிவியல்பூர்வமாக அணுகுகிறோம்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து, ‘எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டது உண்மையிலேயே ஜலதோஷத்தைப் பற்றித்தான். அவையில் அருகில் அமர்ந்திருக்கும் எங்கள் துணைத் தலைவருக்கு உண்மையில் ஜலதோஷம் பிடித்து உடம்பு சரியில்லை, அதற்காகத்தான் தீர்வு கேட்கப்பட்டது’ என்று நகைச்சுவையாக கூறினார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தங்கள் இதயங்களில் ஆன்மீகத்திற்கு எப்போதும் இடம் உண்டு என்றார். இறுதியாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து, ‘உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் துணைத் தலைவருக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறது, நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், அது உங்களுக்கும் ஒட்டிக்கொள்ளக் கூடாது’ என்று நகைச்சுவையாக எச்சரித்தார். இவ்வாறு பாம்புக்கடி விவாதம் நாக தோஷம் மற்றும் ஜலதோஷமாக மாறி சட்டப்பேரவையை கலகலப்பாக்கியது.