Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

*கலெக்டர் சந்திரகலா உத்தரவு

ராணிப்பேட்டை : குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சந்திரகலா கூறினார்.

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.

இக்கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி தெரிவித்ததாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான உறுப்பினர்கள் கொண்ட மாவட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்வித தொழிலிலும் ஈடுபடுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது.

14 முதல் 18 வயதிற்குட்பட்ட அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

2025ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 2025 வரை மொத்தம் 319 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 154 ஆய்வுகள் டிசிபிஓ அலுவலர்களுடன் இணைந்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது என தொழிலாளர் உதவி ஆணையரால் (அமலாக்கம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் கூட்டாய்வுகளில் மாவட்ட பணிக்குழு உறுப்பினர்கள் சிறப்புடன் செயல்படுமாறும், ஆய்வின்போது குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறியும் நேர்வில் நிறுவனத்தின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கல்வி பயிலும் பொருட்டு தேசிய கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் அவர்களை சேர்த்து கல்வி பயில உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வளரிளம் பருவத் தொழிலாளர்களை திறன் மேம்பாட்டு பள்ளியில் கல்வி பயில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், நிலுவையில் உள்ள 3 குழந்தை தொழிலாளர் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழக்கு விவரங்களை காவல் துறையிடம் அனுப்பிடவும் கலெக்டர் சந்திரகலா அறிவுறுத்தினார்.

வருவாய் கோட்டாட்சியர்களுக்கு உபகோட்ட கண்காணிப்பு குழுக்கூட்டத்தினை காலாண்டு தோறும் தவறாது நடத்தி விவரத்தினை தெரிவிக்க வேண்டும். நிலுவையில் உள்ள 8 கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கொத்தடிமை தொழிலாளர் பணிபுரிவதாக ஐயப்பாடு உள்ள இடங்களை கண்டறிந்து உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள் பணமில்லா உதவிகள் பெற உரிய துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மரம் வெட்டுதல், செங்கல் சூளை, அரிசி ஆலை, விவசாயம் போன்ற தொழில்களில் தொழிலாளர் ஆணையர் அறிவுரையின்படி 2025ம் ஆண்டில் 94 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என தொழிலாளர் உதவி ஆணையரால்(அமலாக்கம்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய அரசு சார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பாக உடனடி மறுவாழ்வு நிவாரண தொகை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் திறன் பயிற்சி, சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவை பெற்று வழங்கவும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்தல் போன்ற நல திட்ட உதவிகள் பெறுவதற்கு உரிய துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரகலா கூறினார்.இக்கூட்டத்தில் கோட்டாட்சியர்கள் ராஜி, வெங்கடேசன், உதவி ஆணையர் தொழிலாளர் துறை அமலாக்கம் வரதராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.