Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இடதுசாரிகளுக்கு குறி

தவெக அரசு, பெரும்பான்மை இல்லாமல் தவித்தபோது ஒன்றிய பாஜ அரசு தமிழக அரசியலில் சித்து விளையாட்டுக்களை முன்னெடுப்பதாக கூறி கொண்டு, காங்கிரசோடு இணைந்து கம்யூனிஸ்டுகளும் தவெக அரசை ஆதரித்தனர். கம்யூனிஸ்டுகள் வழக்கம்போல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலும், புதிய அரசு மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை தவெக அரசின் முதல் 100 நாட்களுக்குள் இப்படி தவிடு பொடியாகும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி, காவிரி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இன்னமும் தவெக அரசின் மீது கம்யூனிஸ்டுகள் அதிருப்தியிலே உள்ளனர். இதன் விளைவாக கம்யூனிஸ்டுகளின் விவசாய சங்கங்கள் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் வரம் கொடுத்த சாமியின் தலையிலே கை வைப்பதை போல் சமீபத்திய அரசின் உத்தரவு, கம்யூனிஸ்டுகளை கடும் சினம் கொள்ள வைத்துள்ளது.

இடதுசாரி கட்சிகள், கரப்பான் பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கெடுப்பதை தடுக்கும் வகையில் கல்வித்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் இடையே ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்லூரி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியதும், குஜிலியம்பாறை தாசில்தார் இடதுசாரிகள் குறித்த விபரங்களை கோரியதும் கம்யூனிஸ்டுகளை கடுப்பாக்கியுள்ளது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதோடு, இந்த உத்தரவை பிறப்பித்ததாக தலைமை செயலாளர் சாய்குமாரை பதவிநீக்கம் செய்திட கேட்டுக் கொண்டனர். தமிழக தலைமை செயலாளர் ஒன்றிய பாஜ அரசுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகும், தவெக அரசு அவரை மாற்றாமல் பதவியை தக்க வைத்து கொள்ள வழிவகை செய்தது.

மேலும் 6 மாதங்கள் பதவி நீட்டிப்புக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தலைமை செயலாளர், கம்யூனிஸ்டுகளை சீண்டி வருவதோடு, போராட்டங்களை ஒடுக்கவும் மறைமுக பங்காற்றி வருகிறார். இதன் விளைவாகவே கம்யூனிஸ்டுகள் தற்போது தவெக அரசை நோக்கி கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்த போகிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளை வைத்து தொடர போகிறீர்களா? என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் செயலாளர் பாலகிருஷ்ணனும் நேரடியாக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். எங்கள் தயவில்தான் தவெக ஆட்சியே நடக்கிறது என மார்க்சிஸ்ட் எம்.பி. வெங்கடேசனும் அரசை சாடியுள்ளார். ஒரு உயர்கல்வித்துறையின் அறிக்கையில் கட்சிகளை இழுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என கல்வியாளர்களும் தவெக அரசின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் தவறுதலாக இடம் பெற்றுவிட்டவை என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரோ சட்டசபையிலே சப்பைக் கட்டுகிறார். தமிழகத்தில் 100 நாட்கள் கடந்துவிட்ட தவெக அரசு உண்மையில் எந்த தேசிய கட்சியை ஆதரிக்கிறது என்பது யாருக்கும் விளங்கவில்லை. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போல், காங்கிரசிடம், கம்யூனிஸ்டுகளிடம் ஆட்சிக்கான ஆதரவை பெற்றுக் கொண்டு, ஒன்றிய பாஜவோடும் மறைமுகமாக உறவாடும் போக்கை உணர முடிகிறது. இக்கரைக்கு அக்கரை பச்சையாக தெரிந்த இடதுசாரிகளுக்கு, எக்கரையும் போராட்டமாகவே உள்ளது.