Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டங்களை பின்பற்றாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்: மெட்டாவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றன. கடந்த 2021ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகளின்படி பயனர்களின் தகவல்களை பேஸ்புகிடம் பகிர்ந்து, சமூக ஊடக விளம்பர சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. இதை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து வாட்ஸ்அப், மெட்டா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, ‘‘பயனர்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர நிர்பந்தப்படுகின்றனர். தரவுப் பகிர்வு என்ற பெயரில் குடிமக்களின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது. தரவின் ஒரு வார்த்தையை கூட நீங்கள் பகிர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மக்களின் தனியுரிமை மீறப்படாது என நீங்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அரசியலமைப்பு நெறிமுறைகளை கேலிக் கூத்தாக்காதீர்கள். சட்ட திட்டங்களை பின்பற்ற முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள். வரும் 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் ’’ என உத்தரவிட்டார்.