Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தற்காப்பு கலைகளை கற்பது இன்றைய சூழலில் அவசியம்; பன்முறை திறமையில் அசத்தும் சிறுமி அனாமிகா

போட்டிகள் நிறைந்த உலகில் தனக்கென தனித் திறமைகளை கற்றுக் கொள்வது என்பது அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. கல்வியோடு பல்வேறு கலைகளை கற்றுக் கொள்வது அவசியமாகி வருகிறது. அதற்கேற்ப இன்றைய தலைமுறை குழந்தைகள் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அவ்வகையில் பதிமூன்றே வயது நிரம்பிய அனாமிகா வட சென்னை பகுதியில் உள்ள செயின்ட் கொலம்பியன் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயில்கிறார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவருக்கு பல்வேறு சிரமங்களுக்கிடையேயும் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற பேரார்வம் இருந்து வந்தது. அதன் காரணமாக இன்று படிப்புடன் பன்முக திறமையாளராக சிறுவயதிலிருந்தே வலம் வருகிறார். மேலும் பெண் குழந்தைகள் அனைவரும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்வது இன்றைய சூழலுக்கு தேவையான ஒன்று என பொறுப்புடன் பேசுகிறார் அனாமிகா.

சிறு வயதிலிருந்தே துறுதுறுவென இருக்கும் அனாமிகா அவரது சுறுசுறுப்பு மற்றும் ஆர்வம் காரணமாக கராத்தே கற்றுக்கொண்டார். தற்போது கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கி அசத்தியுள்ளார். தனது 12 ஆம் வயதில் கண்ணை கட்டி கொண்டு நாடுகளின் கொடிகளை இணைத்து உலக சாதனை படைத்துள்ளார். பிரமீடு மற்றும் க்யூப்ஸ் போடுவதில் வல்லவராக இருக்கும் அனாமிகா அதிலும் இரண்டு உலக சாதனை படைத்து அசத்துகிறார். ஹாக்கி, ரன்னிங் மற்றும் லாங் ஜம்ப் என பல விளையாட்டுகளிலும் பயிற்சி மேற்கொண்டு விளையாடி வருகிறார். பள்ளி அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வருகிறார். தற்போது புதிய மொழிகளை கற்றுக் கொள்வதில் கவனம் காட்டி வரும் அனாமிகா சிறந்த பன்முக திறமையாளராக வலம் வர வேண்டும் என்பது தனது கனவு என்கிறார், அவரது ஐந்தாவது வயதிலேயே எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி சாதித்துள்ளார். அதே போன்று மாவட்ட அளவில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். மாநில அளவிலான கராத்தே போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று சாதித்திருக்கிறார். அவரது அதீத ஆர்வம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சிலம்பமும் கற்றுக் கொண்டார். சிலம்பத்திலும் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன் என பெருமையாக சொல்கிறார். அவரது பன்முக திறமைகளுக்காக அறுபதிற்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் மிக சிறந்த விளையாட்டு வீராங்கனை என்கிற பெருமையுடன் வலம் வர வேண்டும் என்கிற ஆசைகள் இருக்கிறது என ஆர்வமுடன் பேசுகிறார்.

இவரது சாதனைகளுக்கு காரணம் தாய் அனிதா அழகப்பன். காவல்துறையில் பணி புரியும் இவர் தனது குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சாதிக்க வேண்டும் என்கிற பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறார். மேலும் மூளை மற்றும் மனதிறனுக்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி குழந்தைகளை சிறப்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். அனாமிகாவின் தங்கையும் இவரை போலவே சாதனையாளர் தான். நடுத்தர குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தைகள் சாதிக்க வேண்டும் என்கிற வெறியோடு பல்வேறு கலைகளை கற்றுக் கொள்வதில் பெரிதும் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர். எனது பெண்கள் கல்வியோடு தற்காப்பு கலைகளில் நல்லதொரு பயிற்ச்சியுடன் சிறப்பான வகையில் செயல்பட்டு வருகிறார்கள் அது இக்காலகட்டத்தில் மிகவும் அவசியமானதும் கட்டாயமானதும் கூட, மேலும் குழந்தைகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகி விட்டது. ஏதேனும் தற்காப்பு கலைகளை கற்றுக்கொண்டால் இக்கட்டான எந்தவொரு சூழலையும் எளிதாய் சமாளித்து விடலாம். என் பெண்களை தைரியமானவர்களாக வளர்க்க விரும்புகிறேன் என சமூக பொறுப்புடனும் தாயின் அக்கறையுடனும் சொல்கிறார் அனாமிகாவின் தாயார் அனிதா அழகப்பன்.

அனாமிகாவின் கனவுகள் மற்றும் லட்சியங்கள் நிறைவேறி சிறந்த நிலையை எட்ட வேண்டும் என்று மகளிர் மலர் சார்பாக வாழ்த்தி விடை பெற்றோம்.

- தனுஜா ஜெயராமன்.