பெண்களின் மாதவிடாய் சுழற்சியை எளிதாகக் கண்காணிக்க உதவும் செயலி தான் மாயா ( Maya - Period & Health ) . இதில் மாதவிடாய் தொடங்கும் தேதி, சுழற்சியின் நீளம், அடுத்த மாதவிடாய் வரக்கூடிய தேதி போன்ற தகவல்களை பதிவுசெய்து வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து பதிவுகளைச் செய்வதன் மூலம் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
மாதவிடாய்க்காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி, முதுகுவலி, தலைவலி, மனநிலை மாற்றம், சோர்வு, மார்பகங்களில் ஏற்படும் மாற்றம் போன்ற அறிகுறிகளையும் பதிவு செய்ய முடியும். இதனால் ஒவ்வொரு மாதமும் எந்த அறிகுறிகள் எப்போது ஏற்படுகின்றன என்பதை ஒப்பிட்டு பார்க்க முடியும். PMS எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளைப் புரிந்துகொள்ளவும் இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும்.
மாயா செயலியின் மற்றொரு பயன், தனிப்பட்ட சுழற்சித்தரவின் அடிப்படையில் மாதவிடாய் மற்றும் கருவுறுதல் தொடர்பான கணிப்புகளை வழங்குவது. கருத்தரிப்பிற்கான தயார்நிலை காலம் மற்றும் கருவுறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் நாட்கள் குறித்தும் தகவல்கள் பெறலாம். மாதவிடாய் தொடர்பான அடிப்படை தகவல்கள், பெண்களின் உடல் மாற்றங்கள் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளை மாயா வழங்குகிறது. குறிப்பாக தங்களுடைய மாதவிடாய் சுழற்சியைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்பும் இளம்பெண்களுக்கு இது ஒரு தகவல் கருவியாக இருக்கலாம்.
குறிப்பாக அவசர வாழ்க்கை, பல விஷயங்களை மூளை ஞாபகம் வைத்துக் கொள்ளும்போது பல பெண்கள் தங்களுடைய சுழற்சி ஆரம்பம் , மற்றும் முடிவுகள் எப்போது என மறக்கும் சூழலும் இருக்கின்றது. அதற்கும் ஒரு அலாரம் போல் இந்தச் செயலி செயல்படுகிறது.


