ஜிம் செல்ல நேரம் இல்லாதவர்கள், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் என பலருக்கும் கைபேசியே ஒரு சிறிய உடற்பயிற்சி மையமாக மாறிவிட்டது. அந்த வகையில், ஒரே மாதிரியான பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்யாமல், ஒவ்வொருவரின் தேவைக்கும் ஏற்ப பயிற்சியை மாற்றி அமைத்துத் தரும் செயலியாக ‘டவுன் டாக் (Down Dog) செயலி கவனம் பெற்றுள்ளது. யோகா மட்டுமின்றி, பிலாட்டீஸ், HIIT, தியானம், பாரே உள்ளிட்ட பயிற்சிகளையும் ஒரே செயலியில் வழங்குகிறது.
இந்தச் செயலியின் முக்கிய சிறப்பு, ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பயிற்சி வகுப்பை உருவாக்கித் தருவதுதான். பயிற்சியின் கால அளவு, உடற்பயிற்சி நிலை, எந்த உடல் பகுதியை அதிகம் கவனிக்க வேண்டும், பயிற்சியின் வேகம், வழிகாட்டும் குரல் மற்றும் இசை என பலவற்றை நாமே தேர்வு செய்யலாம். இதனால் தினமும் ஒரே பயிற்சியை செய்வது போன்ற சலிப்பு ஏற்படுவதில்லை.
யோகா செய்ய விரும்புபவர்களுக்கு இதில் தொடக்கநிலை முதல் மேம்பட்ட நிலை வரை பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. புதிதாக யோகா கற்றுக்கொள்பவர்கள் ஆரம்பநிலையிலிருந்து தொடங்கலாம். உடலை இலகுவாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்தச் செயலி உதவியாக இருக்கிறது. இடுப்பு, முதுகு, தோள்கள், வயிற்றுப் பகுதி போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் பயிற்சியை அமைத்துக்கொள்ள முடியும். சில ஆசனங்களை விரும்பினால் அதிகமாக வரும்படி தேர்வு செய்யவும், பிடிக்காத ஆசனங்களைத் தவிர்க்கவும் வசதி உள்ளது.
பிலாட்டீஸ் விரும்புபவர்களுக்கும் டவுன் டாக் செயலி பயனுள்ளதாக இருக்கும். உடலின் மையப்பகுதியான வயிறு மற்றும் முதுகுப் பகுதிக்கு வலு சேர்ப்பது, உடல் நிலையைச் சீராக வைத்திருப்பது, உடல் கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற நோக்கங்களுக்கான பயிற்சிகளை இதில் தேர்வு செய்யலாம். உடலை வலுப்படுத்துவதுடன், கட்டுப்பாட்டுடனான அசைவுகளையும் கற்றுக்கொள்ள முடிகிறது.
அதிக நேரம் செலவிட முடியாதவர்களுக்கு HIIT பயிற்சி மற்றொரு பயனுள்ள வாய்ப்பு. வீட்டில் மட்டுமல்லாமல் பயணத்தின்போதும் பயன்படுத்தலாம். கைபேசி, கணினி உள்ளிட்ட பல சாதனங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியும். மேலும், தொலைக்காட்சியிலும் பயிற்சியைப் பார்க்கும் வசதி உள்ளது. பல மொழிகளிலும் வழிகாட்டுதல் கிடைப்பதால், தங்களுக்குப் பிடித்த மொழியில் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது.


