112 இந்தியா
அவசரநிலை எப்போது, எங்கு ஏற்படும் என்று யாராலும் கணிக்க முடியாது. குறிப்பாக தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்கு, ஆபத்தான சூழலில் நீண்ட நேரம் தொலைபேசி செய்து உதவி கேட்பது சிரமமாக இருக்கலாம். இதற்காகவே மத்திய அரசின் அவசர உதவி அமைப்பான ‘112 இந்தியா' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவ அவசர உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே அவசர எண்ணின் மூலம் அணுகுவதற்கான வசதியை இந்த அமைப்பு வழங்குகிறது. செயலி மூலம் அவசர உதவி கோரும்போது, பயனரின் இருப்பிடத் தகவலை அவசர உதவி மையத்துக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. இதனால், தங்களுடைய இருப்பிடத்தைத் தெளிவாகச் சொல்ல முடியாத சூழலிலும் உதவி பெறுவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயலியில் ‘ஷவுட்’ (SHOUT) என்ற சிறப்பு வசதியும் உள்ளது. ஆபத்தில் இருக்கும் பெண், அருகில் உள்ள அவசர உதவி மையத்தைத் தொடர்புகொள்ள இந்த வசதி உதவுகிறது. குறிப்பாகத் தனியாகப் பயணம் செய்யும்போது அல்லது இரவு நேரங்களில் அவசரநிலை ஏற்பட்டால், கைப்பேசியில் இந்த செயலி இருப்பது கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.
112 இந்தியா செயலியின் மற்றொரு முக்கிய அம்சம், அவசரநிலையைப் பொறுத்து உரிய சேவையுடன் பயனரை இணைப்பதாகும். காவல்துறை உதவி தேவைப்பட்டால் காவல்துறைக்கும், மருத்துவ உதவி தேவைப்பட்டால் மருத்துவ அவசர சேவைக்கும் தகவல் சென்றடையும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
முன்கூட்டியே செயலியை கைப்பேசியில் நிறுவி, அதன் பயன்பாட்டை அறிந்துகொள்வது முக்கியம். அவசரநிலை ஏற்பட்ட பிறகுதான் செயலியைத் தேடுவதற்குப் பதிலாக, பயணத்திற்கு முன்பே அதைத் தயாராக வைத்திருப்பது நல்லது. குறிப்பாக தனியாகப் பயணம் செய்யும் பெண்கள், மாணவிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ள அவசர உதவிக்கருவியாக இருக்கும் இந்த ‘112 இந்தியா’ செயலி.


