Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத்துக்கு எதிரான லீக் போட்டி; 83 ரன் வித்தியாசத்தில்மெகா வெற்றி: இதுதாண்டா சென்னை!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று, சென்னை அணி 83 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் 18வது தொடரின் 67வது லீக் போட்டி, அகமதாபாதில் நேற்று நடந்தது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவோன் கான்வே துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆயுஷ் மாத்ரே, 17 பந்துகளில் 34 ரன் குவித்து அவுட்டானார். பின், உர்வில் படேல் களமிறங்கினார். 8.5 ஓவரில் சென்னை அணி, 100 ரன்னை எட்டியது. 10வது ஓவரில் உர்வில் படேல் (19 பந்து, 37 ரன்) ஆட்டமிழந்தார். பின் வந்த, சிவம் துாபே 17 ரன்னிலும், கான்வே 52 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதையடுத்து, டெவால்ட் புரூவிஸ், ரவீந்திர ஜடேஜா இணை சேர்ந்து ஆடினர். அட்டகாசமாக ஆடிய புரூவிஸ், 19 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். 20வது ஓவரின் கடைசி பந்தில் புரூவிஸ் (23 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி, 57 ரன்) ஆட்டமிழந்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன் குவித்தது. அதையடுத்து, 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் களமிறங்கியது. துவக்க வீரர்களாக தமிழகத்தின் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் வந்தனர். கில் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்வந்த ஜோஸ் பட்லர் 13 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த, ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் (0), ஷாருக்கான் (19 ரன்), சாய் சுதர்சன் (41 ரன்), ரஷித் கான் (12 ரன்), ஜெரால்ட் கோட்ஸீ (5 ரன்), ராகுல் தெவாடியா (14 ரன்), அர்ஷத் கான் (20 ரன்) ஆகியோர் சீரான இடைவெளியில் அவுட்டாகினர். 19வது ஓவரில் கடைசி விக்கெட்டாக சாய் கிஷோர் (3 ரன்) வீழ்ந்தார். குஜராத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன் மட்டுமே எடுத்தது. அதனாால் சென்னை 83 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. சென்னை தரப்பில் கம்போஜ், நுார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.