இலைக்கட்சியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி லேடி மந்திரிக்கு சீட் யோகம் அடிச்சது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘விரைவில் லஜகவில் இணையும் முடிவில் இருக்கிறாராமே துறையே இல்லாமல் யூனியன் மலராத கட்சியில் அமைச்சரா இருப்பவர்..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் மலராத கட்சியில் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற குமாருக்கு, இதுவரை இலாகா ஒதுக்காமல் புல்லட்சாமி இருந்து வருகிறாராம்.. மலராத கட்சியில் இருந்து கொண்டே, தனக்கு எதிராக லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனை வைத்து குமார் அரசியல் செய்வதில் புல்லட்சாமி கடும் கோபமடைந்துள்ளாராம்.. குமாருக்கு கடைசிவரை இலாகா ஒதுக்கும் எண்ணமும் இல்லையாம்.. இதுகுறித்து மலராத கட்சியினர் புல்லட்சாமியிடம் கேட்டபோது, ‘அவர் என்ன உங்க கட்சியா? மலராத கட்சியின் துண்டை மட்டும் போட்டுக்கொண்டு, வேறு கட்சிக்கு ஆதரவாக அரசியல் செய்வதில் உங்களுக்கு கோபம் வரவில்லையா? அவருக்கு துறை கேட்டு என்னிடம் வராதீர்கள்’ எனக்கூறி விட்டாராம். இதனால் புதுச்சேரி அரசியல் வரலாற்றில், இலாகா இல்லாமல் அமைச்சராக ஒருவர் இருந்தார் என்ற சாதனையை குமார் படைக்க இருக்கிறாராம்.. மேலும் மலராத கட்சி தலைமை தன்னை நீக்கட்டும், புல்லட்சாமியின் உண்மை முகம் மக்களுக்கு தெரியவரட்டும் என்பதால், இவ்வளவு நடந்தும் குமார் அமைதி காக்கிறாராம்.. தேர்தல் நன்னடத்தை விதிகள் அறிவிக்கபட்டவுடன், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து லஜகவில் இணைந்து புல்லட்சாமிக்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தனது சகாக்களிடம் கூறி வருகிறாராம்..ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் புல்லட்சாமி இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கனவான இல்லம் கானல் நீராகி போகுமோ என ஷாக்கான விதவைக்கு திடமான பதில் கொடுத்திருக்கிறாராமே அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குறிச்சி மாவட்டத்தில் மாதவசேரி என்ற பகுதி இருக்கு.. இங்குள்ள ஒரு விதவை தனது மகனுடன் குடிசையில் வசித்து வந்தாராம்.. வேலை விஷயமாக மகனானவர் அண்டையிலுள்ள கேரள மாநிலத்துக்கு புலம் பெயர்ந்தாராம்.. சில மாதங்களுக்கு முன்பு தனிமையில் வசித்த விதவைக்கு கனவு இல்லம் ஒதுக்கப்படவே வீடுகட்டும் பணி தொடங்கியிருக்கிறாரு.. ஆனால் கட்டுமான பணிக்கான தவணை கைக்கு வராமல்போக, கடன் வாங்கி மேல்தளத்தை முடித்தாராம்.. பின்னர் கீழ்மட்ட அதிகாரிகளிடம் முறையிட நடவடிக்கை இல்லையாம்.. சம்பந்தப்பட்ட துறையை நாட, பணி உத்தரவில் அடையாள எண் மிஸ்சிங் என்பதால் கனவு இல்லம் கானல் நீராகி விட்டதாக சிலர் கூற ஷாக் ஆனாராம் விதவை. கனவு இல்ல பணத்தை கொடுக்கணும் என சமூக அமைப்புகள் கோரிக்கை முழங்க, களஆய்வு நடத்தப்படும் என திட்ட அதிகாரி திடமான பதில் தந்துள்ளதால் புதிய நம்பிக்கையில் விதவை காத்திருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புல்லட்சாமி ஆசைப்பட்டாலும் மலராத அணியில் விரிசலால் பொங்கல் பரிசு தாமதமாவதாக பேச்சு ஓடுகிறதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தை பண்டிகை நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அனைத்து கார்டுக்கும் ரொக்கப்பணத்துடன், பொங்கல் பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருக்காங்க.. ஆனால் சிறிய யூனியன் பகுதியான புதுச்சேரியிலும் இதேபோல் தை திருநாளுக்கு தாராளம் காட்ட புல்லட்சாமி முடிவெடுத்து இருந்தாராம்.. ஆனால் பல தடைகளை தாண்டி தான் தற்போது பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க ஒப்புதல் கிடைத்து பணி தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறதாம்.. ரொக்கப் பணமும் காலத்தோடு வழங்க வேண்டுமென புல்லட்சாமி ஆசைப்பட்டுள்ள நிலையில் அது கானல் நீராகி விடுமோ என்ற கவலையில் உள்ளூர்வாசிகள் இருக்காங்களாம்.. ஆனால் அவரது மருமகனும் அமைச்சருமான சிவாயமானர், கண்டிப்பாக பொங்கல் ரொக்கம் உண்டு என பேசி வருகிறாராம்.. திட்டத்தை யார் அறிவிப்பது என்பதில் மலராத கட்சி கூட்டணிக்குள் உரசல் நீடிக்கிறதா என்ற பேச்சுகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறதா சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இவ்வளவு நாளும் இலைக்கட்சி தலைவர் மாவட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட மாஜி லேடி மந்திரிக்கு தேர்தலில் சீட் யோகம் கிடைச்சிருக்காமே எப்படி?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் இருந்து தூக்கப்பட்ட செங்கிஸ்கான், நடிகர் கட்சிக்கு போயிட்டாரு.. வழிதெரியாமல் தவித்த எனக்கு வழிகாட்டியவர் இந்த நடிகர் தான் என நெஞ்சின் ஆழத்தில் இருந்து நடிகரை புகழ்ந்தாரு.. இதற்காகவே இலைக்கட்சியில் அதிருப்தியில் இருப்போரை கொண்டு வந்து உங்களது காலடியில் சமர்ப்பணம் செய்வேன்னு சத்தியம் செஞ்சியிருக்காரு செங்கிஸ்.. இதற்காக பட்டியலிட்டு தேடும் பணியில் ஈடுபட்டிருக்காராம்.. அதுவும் இலைக்கட்சி தலைவரின் மாவட்டத்தில் இருந்து மாஜி எம்எல்ஏ ஒருவரை ஏற்கனவே தூக்கிட்டாராம்.. இதனால ஷாக்காகி போன இலைக்கட்சி தலைவர் இனிமேல் ஒருநபர் கூட வெளியே செல்லாதவாறு பார்க்குமாறு உத்தரவு போட்டிருக்காரு.. ஆனால் செங்கிஸ்கான் பட்டியலில் ரெண்டு முதல்வர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மாஜி லேடி மந்திரியியின் பெயரும் இருந்திருக்கு... மம்மி காலத்தில் மாவட்ட செயலாளர் பொறுப்பையும் அந்த லேடி மாஜி கவனிச்சிருந்தாங்களாம்.. வழக்கமாக அவரை ஓரம் கட்டியே வச்சிருந்தாங்களாம்.. எந்த நிகழ்ச்சிக்கும் அவருக்கு அழைப்பு அனுப்பாமல் இருந்திருக்காங்க.. பட்டியல் ரகசியத்தை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர் தனது நண்பரான புறநகரை அனுப்பி விட்டிருக்காரு.. அவரும் ஓடோடிபோய் மாஜி மந்திரியை பார்த்திருக்காரு.. எந்த தொகுதியில போட்டியிட வேண்டுமானாலும் எடுத்துக்கோங்கன்னு சொன்னதோடு, இலைக்கட்சி தலைவரிடம் போனை போட்டு கொடுத்ததாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. பூத் செலவு உள்பட சிறு சிறு செலவை மட்டும் செய்ய தயாரா இருக்கோம்.. ஆனால் ஓட்டுக்கு துட்டுக் கொடுக்க எங்களிடம் பசை இல்லை என மாஜி சொன்னதாக சொல்லப்படுது.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்னு இலைக்கட்சி தலைவர் சொன்னதாகவும் கட்சியினரிடையே தகவல் கசிஞ்சியிருக்கு.. இதனை தெரிஞ்சிக்கிட்ட பொதுக்கூட்டம் நடத்தின வீரமான தொகுதி எம்எல்ஏ மனசொடிஞ்சி போயிட்டாராம்.. ஏற்கனவே ரெண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு என சொல்லி பெரும் தொகையை செலவு செய்ய வச்சிட்டாங்களாம்.. அதே நேரத்தில் உனக்கு தான் தொகுதின்னு ஆசைவார்த்தை கூறியதால் இன்னொரு லேடி மாஜியும் சில லகரங்களை செலவு செஞ்சாராம்.. ஆனால் தொகுதி சகோதரி பக்கம் என உறுதியான தகவல் தொகுதி முழுவதும் பரவியதால் அவரும் கடும் வேதனையில் இருக்காராம்.. இதேபோல பத்து பேரிடம் உங்களுக்கு தான் உங்களுக்கு தான் என ஒவ்வொருவரின் ஆசையை தூண்டி விட்டுட்டாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

