‘‘தோல்வியடைந்த தொகுதியை கூட்டணிக்கு தள்ளி விட மாஜி அமைச்சர் முயற்சிப்பதால் சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புரம் என்றும் முடியும் மாவட்டத்தில் திண்டிவனத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் செல்வாக்காக இருந்து வந்தாராம். ஆனால் புரம் என்று முடியும் தொகுதியில் தோல்வியை தழுவியதால், தற்போது தனது ராஜ தந்திரத்தால் ராஜ்யசபா எம்பியாக இருக்கிறாராம்.
தற்போது இலை கட்சியில், வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் விருப்ப மனு தாக்கல் அறிவிக்கப்பட்ட நிலையில் படுதோல்வி அடைந்த தொகுதியை மாறி வேறு தொகுதிக்கு ஓட்டம் பிடித்து இருக்கிறாராம் மாஜி அமைச்சர். தொகுதி மாறியதால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருந்திருக்கிறதாம். கட்சியில் முக்கிய பிரமுகரான அவரே தோல்விக்கு பயந்து ஓட்டம் பிடிப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம்.
இந்நிலையில் மாஜி அமைச்சர் தோல்வி அடைந்த தொகுதியில் அதே கட்சியைச் சேர்ந்த பலரும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கிறார்களாம். உடனிருந்தவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ததை ஏற்றுக் கொள்ளாத மாஜி அமைச்சரோ இந்த தொகுதியை கூட்டணிக்கு கழட்டி விட காய் நகர்த்தி வருகிறாராம். இதனால் மாஜி அமைச்சருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. சேலத்துக்காரரிடம் நிர்வாகிகள் முறையிட்டு வருகிறார்களாம்.
தோல்விக்கு பயந்து இவர்தான் ஓட்டம் பிடித்தார். எங்களையாவது போட்டியிட விடுங்கள் என்று கூறி வருகிறார்களாம். ஆனால் நான் போட்டியிடாத தொகுதியில் இலை கட்சியினர் யாரும் போட்டியிடக் கூடாது என்று மாஜி அமைச்சரும் விடாப்பிடியாக இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புறம்போக்கு நிலத்தை எல்லாம் பட்டா போட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வர்றாராமே அந்த அதிகாரி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வட்டத்தின்ஆட்சியராக இருக்கும் குணமானகடவுள் பெயரைக் கொண்டவர் ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி செல்லும் டிவிஸ் ரோட்டில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலத்தை, மாவட்டத்தின் உச்சபட்ச அதிகாரி மற்றும் மாவட்ட வருவாயின் அதிகாரி உதவியுடன் பட்டா வழங்கி கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் வரைக்கும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதே போல இந்த வட்டத்தின்ஆட்சியான குணக்கடவுள், ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழ்மையான மக்களை, அரசு திட்டங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வர இருக்கிறது என்று வாய் மொழியாக அச்சுறுத்தி நிலத்தை காலி செய்ய வைப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம். பிறகு அந்த இடத்திற்க்கு ஆட்சேபனை அற்ற நிலம் என்று பட்டா வழங்கியும் அதை விற்க அவரே ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாகவும் செயல்பட்டு வருகிறார்.
தற்போது அதே பாணியில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் வரி செலுத்தி அனுபவத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களை வெளியேற்றும் வேலையில் மாவட்டத்தின் உச்சபட்ச ஆட்சியர் மற்றும் மாவட்டத்தின் வருவாய் அதிகாரி உதவியுடன் வட்டத்துஆட்சி குணக்கடவுள் மிகவும் மும்மரமாக செயல்பட்டு வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை பார்ட்டியில் உள்கட்சி பூசல் பூதாகரமாகிக் கொண்டிருக்கு போல..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தூங்கா நகரில் இலைக்கட்சி பலவாறாக உடைந்து பலமற்று கிடக்கிறது. உதயமானவர், தெர்மோகோல்காரர், செல்லமானவர் என பவரான மூன்று பேர் மாவட்டப் பொறுப்பில் இருந்தும், மூவருக்குள்ளும் ஏகப்பட்ட லடாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் மருத்துவரானவர் தன்னை முன்னிலைப்படுத்தி நான்காவது பவராக வளர்ந்து வருவதில் இந்த மும்மூர்த்திகளும் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம்.
வரும் தேர்தலில் கூட்டணிக்கு தாரை வார்த்தது போக தங்களுக்கே வேண்டிய தொகுதி கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற ஆத்திரம் மேலோங்கி இருக்க, இவர்களுக்கு போட்டியாக டாக்டரானவரும் இருப்பதால் இவரைக் கழற்றி விடும் காரியங்களில் கூடுதல் கவனம் காட்டப்படுகிறதாம். சமீபத்தில் தூங்கா நகர் உள்ளாட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சேலத்துக்காரர் அறிவித்த போராட்டத்திற்கென ஆட்களைத் திரட்டிக் கொண்டு டாக்டரானவர் போயிருக்கிறார்.
இதைக்கண்ட மூவரும் மேடையில் அவரை ஏறவிடாமல் பார்த்துக் கொண்டதோடு, மருந்துக்கும் கூட டாக்டரானவரின் பெயரை மைக்கில் உச்சரிக்கவில்லை. வேறு வழியின்றி அவமானத்தோடு கூட்டத்தோடு கூட்டமாக தன் ஆதரவாளர்களுடன் நின்று டாக்டரானவர் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டு, தான் போராட்டத்தில் பங்கெடுத்ததைக் காட்டிக்கொண்டார்.
இன்னும் இந்த நிராகரிப்பை ஏற்க முடியாமல், பார்க்கிற அத்தனை பேரிடமும் இலைக்கட்சிக்கென எவ்வளவோ உழைத்தும் உள்ளூரில் புறக்கணித்தால் எப்படி நான் அரசியலில் வளர்வதென டாக்டரானவர் புலம்பித் தள்ளி வருகிறார். இந்த ஆத்திரத்தின் உச்சமாக சமீபத்தில் இலைக்கட்சி நிறுவனரின் நினைவு நாளுக்கு பெரும் போஸ்டர்களை அச்சடித்து ஊர் முழுக்க ஒட்டிய டாக்டரானவர், ஒரு போஸ்டரிலும் உதயமானவர், தெர்மோகோல்காரர், செல்லமானவர் படத்தை அச்சிடவில்லை.
எப்போதும் இந்த உள்ளூர் பொறுப்பாளர்களை போஸ்டரில் போட மறக்காத டாக்டரானவர், இம்முறை இவர்கள் படங்களைத் தவிர்த்து, கட்சித்தலைவர்களின் படங்களை மட்டுமே போட்டு போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியது தொண்டர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருப்பதுடன், கட்சிக்குள் புகைச்சலையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கதர் கட்சியில் என்ன கலாட்டாவாம்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கதர் கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் மாற்றம், புதியவர்கள் தேர்வு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மேலிட பார்வையாளர் வருகை தந்து ஆய்வு செய்து சென்ற நிலையில் அவர் மீதே கட்சியில் சிலர் புகார் வாசிக்க அது கட்சி மேலிடம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த முக்கிய பிரமுகரிடம் கட்சி தலைமை கடுமையாக நடந்துகொண்டதாம்.
அவர் தனது கருத்தை வாபஸ் பெற்ற நிலையில் கட்சி மேலிடம் மேலும் ஒரு குழுவை மீண்டும் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாம். அவர்கள் நடந்த நிகழ்வுகள் தொடர்பாகவும், நிர்வாகிகள் பட்டியல் தேர்வு தொடர்பாகவும் ரகசியமாக பலரையும் சந்தித்து ஆய்வு நடத்தியுள்ளார்களாம். ஏற்கனவே பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகுதான் புதிய நிர்வாகிகள் பட்டியல் தேர்வு என்பதால் அடுத்த தலைவராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் கட்சி நிர்வாகிகளிடம் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

