இலைக்கட்சி தலைவரின் மைத்துனர் களம் இறங்கியதால் நிழலான மா.செ. கை இறங்கிப்போனது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘பொதுக்கூட்ட கூட்டம் அசைன்மெண்ட் ரகசியம் அறிந்து மாஜி தலைவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துட்டாராமே மலராத கட்சி மாநில தலைவர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் மலராத கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் கூட்டத்திற்கு வரும் தொண்டர்களை விட காலி சேர்கள்தான் அதிகம் பார்க்க முடிகிறதாம்..
காலி சேர்கள் வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி மீம்ஸ் கன்டென்ட்டுகளுக்கு வழிவகுத்து வருவதால் இதை தவிர்க்க அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு கூட்டம் சேர்க்க கட்சி தலைமை டார்கெட் பிக்ஸ் செய்துள்ளதாம்.. இது ஒருபுறம் இருக்க, கட்சியின் தற்போதைய தலைவருக்கும் பதவி இழந்த தலைவருக்கும் நாளுக்கு நாள் ஈகோ அதிகரிச்சிட்டு வருகிறதாம்..
மேற்கு மண்டலத்தில் தன்னுடைய பவரை காட்டுவதற்கு மாஜி தலைவர் போட்ட ரகசிய திட்டம் அம்பலமாகிவிட்டதாம்.. அதாவது மேற்கு மண்டலத்தில் கட்சி சார்பில் நடக்கிற பொதுக்கூட்டங்களுக்கு வரும் கூட்டம் தனக்காக மட்டுமே வருகிறது என்ற பிம்பத்தை செட் செய்து டெல்லி தலைமைக்கு வீடியோக்களை அனுப்பி வைக்கும் வகையில், தான் பேசி முடித்தவுடன் கூட்டத்தில் இருக்கும் பெரும் பகுதியினர் உடனடியாக கலைந்து செல்லும் வகையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம்..
சமீபத்தில் பனியன் சிட்டியில் நடந்த ஒரு கூட்டத்திற்கு இதுபோன்ற ஒரு அசைன்மெண்ட் கொடுத்த நிலையில் இந்த தகவல் மாநில தலைவரின் காதுகளுக்கு எட்டியதாம்.. உஷாரான மாநில தலைவர் கடைசியாக மாஜி தலைவர் பேசுவார் என்று முழங்கி கடைசியாக பேச வைத்து மாஜி தலைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பவர்புல் மேடை பேனரில் கனி சின்னத்தை பார்த்ததும் தந்தை கடும் அப்செட் ஆயிட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்கனி கட்சியில் தந்தை, மகன் உரசால் சின்னம் உரிமை பிரச்னை எழுந்திருக்கு.. இந்த விவகாரம் நீதிமன்ற படிக்கட்டை தொட தந்தையோ, தான் தொடங்கிய கட்சியில் எதையும் உரிமை கொண்டாட முடியாதபடி வழக்கை தொடுத்துள்ளாராம்..
ஆனால் டெல்லி பவர்மேன் வருகையால் விழா மேடை பேனரிலேயே மாம்பழ சின்னம் இடம்பெற்றதாம்.. இதனால் தந்தையானவர் கடும் அப்செட் ஆயிட்டாராம்.. மாம்பழ சின்னம் எங்களுக்கானது.. ஆணையம் வசமுள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது சட்ட விரோத செயல்.. தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது என போர்க்கொடி தூக்கியுள்ளாராம்..
கூட்டணியே இன்னும் இறுதி முடிவாகாத நிலையில், மகனுக்கு ஒன்றிய பவர்புல் கிடைத்து விட்டதால் தங்களது எதிர்காலம் குறித்த கவலையில் தந்தையானவர் உள்ளாராம்.. அவரது பின்னால் அணிவகுத்த ஆதரவாளர்களும் புலம்பி வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சீட் மட்டும் கொடுங்க.. செலவை நான் பார்த்துகிறேன் என தலைமையையே கிறுகிறுக்க வைத்து விட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தின் மூன்றாம்படை வீடு தொகுதியில் இலைக்கட்சி வேட்பாளர் நான் தான் என பார்ப்பவர்களிடம் எல்லாம் மூன்று பேர் மாறி, மாறி கூறி வருகிறார்களாம்.. குறிப்பாக மாஜி எம்எல்ஏ ஒருவர், தனக்குத்தான் சீட் தர வேண்டுமென தலைமைவசம் தொடர்ந்து நச்சரித்து வருகிறாராம்.. இவருக்கு போட்டியாக மன்னர் பெயர் உள்ள ஒருவரும் ‘செலவை நான் பார்த்துக்கிறேன். சீட் மட்டும் கொடுங்க...’
என கேட்டதில் தலைமையே கிறுகிறுத்து விட்டதாம்... இவர்களோடு கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஒருவரும், இம்முறை ஜெயிச்சு காட்டுறேன்.. மீண்டும் வாய்ப்பு தாங்க என கேட்டு வருகிறாராம்... 3 பேருமே முக்கியமானவர்கள் என்பதால், தலைமை குழப்பத்தில் தவிக்கிறது. இதுபோதாதென்று மலராத கட்சியை சேர்ந்தவர்களோ, மூன்றாம் படை வீடு என்பதால், எங்களின் முதன்மை விருப்ப பட்டியலில் இந்த தொகுதி உள்ளது. எனவே, சீட் எங்களுக்குத்தான் வேண்டும்.
அதுவும் தங்கள் கட்சியின் மாஜி மாவட்டத்திற்கு தான் சீட் என்று கூறி, தங்கள் பங்குக்கு கிளப்பி விட்டு வருகிறார்களாம். இதனால், மூன்றாம் படை வீடு தொகுதியில் முந்திக் கொள்பவர் யார் என்ற பேச்சு தொகுதி முழுவதும் பரவிக் கிடக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவரின் மைத்துனர் களம் இறங்கியதால் நிழலான மாவட்ட செயலாளரின் கை இறங்கிப் போச்சாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் மாநகர், புறநகர் என ரெண்டு மாவட்டம் இருக்குது..
அறிவிக்கப்பட்ட ரெண்டு மாவட்ட செயலாளர்கள் இருக்காங்க.. ஆனால் அறிவிக்கப்படாத மாவட்ட செயலாளர் ஒருவர் இருக்காராம்.. அவர் தான் இலைக்கட்சி தலைவரோட மைத்துனராம்.. அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்ற பதவியை சுமந்துக்கிட்டிருக்கும் அவர், தற்போது கூடுதல் பொறுப்பாக மா.செ. பதவியை பெற்றிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.... அவரது கட்டுப்பாட்டில் 3 தொகுதி வருதாம்.. அதில் ஒன்று தான், அவரது மாமாவான இலைக்கட்சி தலைவர் தொகுதியா இருக்குதாம்..
இவ்வளவு உறவை கொண்டிருந்தாலும், நிழலானவர் எப்படி நம்ம ஏரியாவுக்குள் அதிகாரம் செலுத்தலாம் என்ற கேள்வியோடு அதிகாரத்தை பெற்றுக்கிட்டாராம்.. இதற்கு இலைக்கட்சி தலைவரும் எந்த எதிர்ப்பையும் சொல்லலையாம்.. இதையடுத்து 500 பேர் அமரும் வகையில் பிரமாண்டான ஆபீசையும் தேவூரில் போட்டிருக்காராம்.. தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள் அமர்ந்து செல்வதற்கான ஏற்பாடாம் அது..
சமீபத்தில் மைத்துனரின் பர்த்டே வந்துச்சாம்.. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மலர் மாலை அணிவித்தும், கேக்குகளை வெட்டியும் வாழ்த்து சொன்னாங்களாம்.. இலைக்கட்சி தலைவர் சுற்றுப்பயணத்தின் போது, வாழ்த்து கோஷம் போடுவதற்கெனவே மைத்துனர் ஆயிரம் பேரை செல்லுமிடமெல்லாம் அழைச்சிட்டு போனாராம்.. அவர்கள் மைத்துனரின் செல்போன் நம்பரை கொடுத்துட்டு வந்தாங்களாம்..
அதற்காகவே 3 நம்பரை ரெடி பண்ணி வச்சிருந்தாராம் மைத்துனர்... தேர்தல் நெருங்கி வரும் நிலையில், செல்போன் அழைப்பு வந்துக்கிட்டே இருக்குதாம்.. இதனால் மைத்துனர் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்றாங்க.. அதே நேரத்தில், நிழலான மா.செயலாளரின் கை இறங்கிப்போச்சாம்.. அவரும் அமைதி காப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அமைதிக்கு பின் புயல் எழாமல் இருக்காதுன்னு, அவரோட அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

