‘‘கடல் ஊர் மாவட்டத்தில் கம்மாபுரம் ஒன்றியம் இருக்கு.. இதன் ஊராட்சி செயலராக தாய்மொழி செல்வன் இருக்கிறாராம்.. இவரு கூடுதலாக இருண்ட குறிச்சியையும் கவனித்து வருகிறாராம்.. போதாதற்கு ஊராட்சி சங்கத்திலும் பொறுப்பில் இருப்பதால் மன்ற அலுவலகத்தில் செல்வனை காண முடியலையாம்.. ஆனால், பல கிராமங்களில் பல கோடி மதிப்பிலான அரசு பணிகளை பினாமி பெயரில் ஒப்பந்தம் எடுத்துள்ளாராம்.. தனக்கு ஜால்ரா போடுபவர்களுக்கு ப-விட்டமின்களை வாரி இறைக்கிறாராம்.. அத்தோடு மின்வேலி பகுதியிலுள்ள மேரி ஊராட்சியிலும் டம்மியாக ஒருவரை வைத்துக்கொண்டு, முக்கிய முடிவுகளை எல்லாம் செல்வன்தான் எடுத்து ராஜாவாக வலம் வருகிறாராம்.. தற்போது வீடுகள் ஒதுக்கீடு, 100 நாள் வேலை திட்ட பணிகளில் முறைகேடு நடப்பதாக கிராம மக்கள் புகார்களை முன்னெடுக்க சங்க பொறுப்பிலும் செல்வன் இருப்பதால் அனைத்து பிரச்னைகளையும் செல்வத்தால் சிம்பிளாக முடித்து விடுகிறாராம்.. இதனை சக செயலர்களே புலம்பித் தீர்க்க தொடங்கி உள்ளார்களாம்.. அத்தோடு மாவட்ட நிர்வாகியின் கவனத்துக்கும் கொண்டு செல்ல கூட்டு முடிவெடுத்து இருக்கிறார்களாம்.. இதுபற்றிதான் கடல் ஊர் மாவட்ட ஊராட்சி செயலர்கள் மத்தியில் பரலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுதிக்கு வரிசைக்கட்டி நிற்கும் மாஜிக்களையே மிரள வைக்கிறாராமே இலைக்கட்சியின் மாவட்ட மகளிரணி நிர்வாகி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்ட இலைக்கட்சி தரப்பில் புதுசு புதுசா பலரும் போட்டி போட்டு விருப்ப மனு அளித்து வர்றாங்களாம்... பலர் சீட்டுக்கான ரேஸில் இருக்கும் நிலையில், புதுமுகங்களின் நடவடிக்கையால் பழைய முகங்கள் மிகுந்த கவலையில் உள்ளனராம்.. கோட்டை என முடியும் ஊரைச் சேர்ந்த டாக்டரின் மனைவிக்கு தற்போது மகளிர் அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கு.. பொறுப்பு வாங்கியதில் இருந்து தற்போது வரை, ‘இந்த தொகுதி எனக்குத்தான்... வேறு யாருக்கும் தலைமை தராது’ என போல்டாகவே கூறி வருகிறாராம்.. எதற்கும் இருக்கட்டுமென தனக்கான கட்சி அலுவலகத்தை மார்கழிக்கு முன்பாகவே கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாளில் திறந்துள்ளாராம்.. இந்த அலுவலகத்தை திறக்க வருவதாக கூறிய மாஜி சபாநாயகரின் தம்பியான மாவட்ட செயலாளர், எங்கே தனக்கு எதிராக அரசியல் செய்துவிடுவாரோ என நினைத்து கடைசி நேரத்தில் வருகையை தவிர்த்துள்ளாராம்.. எப்படியும் இந்த தொகுதிக்கான சீட் தனக்கு தான் என்ற நினைப்பில், அந்த பெண்மணி கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழையா விருந்தாளியாக சென்று பெரும்பரிசுகள் தந்து மிரள வைக்கிறாராம்.. மாஜிக்கள் பலரும் கோட்டை தொகுதிக்காக வரிசை கட்டி நிற்கும் நிலையில் மகளிரணி நிர்வாகியின் செயல் இலைத்தரப்பினரிடம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘யூனியனில் சைலன்ட்டான ஸ்டார் விடுதிகளால் திடீர் வரிகுறைப்பை அறிவிக்கப்பட்டிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுற்றுலாவுக்கு பெயர்போன புதுச்சேரி யூனியனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்போதும் களைகட்டும்.. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தே வந்துள்ளதாம்.. இதனால் அரசு மட்டுமல்ல, உணவகங்கள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், மதுபார்கள், சுற்றுலா தலங்கள் என பல தரப்பும் வருவாய் ஈட்டியதாம்.. வழக்கம்போல இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகளை ஸ்டார் விடுதிகள் செய்து வருகிறதாம்.. ஆனால் கேளிக்கை நிகழ்வுகள் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட வில்லையாம்.. எதிர்பார்த்தவாறு அறைகள் நிரம்பாமல் இருப்பினும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளார்களாம்.. கடந்தாண்டு கண்மூடித்தனமாக விதித்த நகராட்சி கேளிக்கை வரிவிதிப்பால்தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததாலே ஸ்டார் விடுதிகள் எல்லாம் சைலண்ட் மூடில் உள்ளார்களாம்.. இதை பல்ஸ் பார்த்த நகராட்சியோ காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடா... என்ற விரக்தியில் திடீர் வரி குறைப்பை அறிவித்ததாம்.. இனியாவது கேளிக்கை அறிவிப்பு வருமா என்று வழிமேல் விழிவைத்து சுற்றுலாவாசிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் காத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேனிக்காரர் ஆதரவாளரான மாஜி அமைச்சருக்கு நடிகர் கட்சி வலை விரிக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேனிக்காரர் அணியில் நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் டெல்டா மாவட்டத்தில் செல்வாக்குடன் இருந்து வருகிறார். சமீபத்தில் இலை கட்சியில் இருந்து நடிகர் கட்சிக்கு சென்ற கொங்கு மண்டலத்தை சேர்ந்த சீனியர் மாஜி அமைச்சர், தேனிக்காரரின் நெருங்கிய ஆதரவாளரான அந்த மாஜி அமைச்சருடன் அடிக்கடி போனில் பேசி வருகிறராம்.. அப்படி அவரிடம் பேசும்போதெல்லாம் விரைவில் எங்கள் பக்கம் வந்து விடுங்கள் என்ற வார்த்தையை அடிக்கடி அவர் கூறி வருகிறாராம்.. நடிகர் கட்சி பக்கம் வந்தால் டெல்டா மாவட்டத்துக்கு நீங்கள் தான் பொறுப்பு என ஆசை காட்டியிருக்காரு.. ஆனால் மாஜி அமைச்சர், எந்தவித பிடி கொடுக்காமல் இருந்து வருகிறாராம்.. புத்தாண்டில் புதிய முடிவை எடுத்தாலும் ஆச்சரியமில்லை என டெல்டா மாவட்டம் முழுவதும் மாஜி அமைச்சரின் ஆதரவாளர்களுக்குள் அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரின் தடாலடியால் மிரண்டு போயிருக்கிறாராமே வீர வசம் பேசும் மாஜி முகம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் வட மாவட்டங்களில் தன்னைதானே தலைவரைபோல் காட்டிக் கொள்ளும் சூரியமுகம் கொண்ட மாஜி அமைச்சர் இருக்கிறாராம்.. வரும் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட கட்சியில் விருப்பமனு அளித்தாராம்.. தோல்வி பயத்தில் தொகுதி மாறி ஓடிவிட்டதாக நெட்டிசன்கள் மட்டுமின்றி சொந்த கட்சியினரும் கலாய்த்து வருகிறார்களாம்.. இந்த தகவல் சேலத்துக்காரர் காதுக்கு போக, சூரிய முகத்தை அழைத்து புரம் என்று முடியும் தொகுதியில்தான் மீண்டும் நீங்க நிற்க வேண்டும். அங்கு விருப்பமனு தாக்கல் செய்யுங்க என்று தடாலடியாக உத்தரவு போட்டிருக்கிறாராம்.. வீர வசனம் பேசும் மாஜி அமைச்சரே தோல்வி பயத்தில் தொகுதி மாறி ஓடினா கீழ்மட்ட நிர்வாகிகள்கூட தேர்தலில் நிற்க பயப்படுவாங்க, நீங்கள் அங்கதான் நிற்க வேண்டுமென கண்டிஷனாம்.. நம்மகிட்ட இருந்து போனவரிடம்தான் தோல்வியடைந்திருக்கிங்க, உங்கள் செல்வாக்கை காட்ட அந்த தொகுதியில் நின்று ஜெயிச்சிட்டுவாங்க, அப்புறம் உங்க செல்வாக்கு என்னவென்று பார்ப்போம் என்று பகீரங்கமா பேசி அனுப்பியதால் மிரண்டுபோய் இருக்கிறாராம் மாஜி அமைச்சர்.. இதுபற்றிதான் புரம் இலை வட்டாரத்தில் பரவலாக பேச்சு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

