கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் மாற்றம் என்ற பிரச்னை பூதாகரமாக மாறிவிட்டது. முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் பதவி போட்டியின் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் மேலிட முடிவுக்கு இருவரும் கட்டுப்படுவோம் என்று சித்தராமையா கூறுகிறார். ஆனால் மேலிடம் இதுவரை இப்பிரச்னையில் வாய் திறக்கவில்லை. 2023ம் ஆண்டு போடப்பட்ட ரகசிய ஒப்பந்தம் 5 பேருக்கு மட்டுமே தெரிந்த உண்மை என்று டி.கே.சிவகுமார் கூறுகிறார்.
பெங்களூருவில் தங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சித்தராமையா சந்தித்து பேசினார். ஆனால், அவர் டெல்லி புறப்பட்ட போது அவருடன் விமான நிலையம் வரை டி.கே.சிவகுமார் ஒன்றாக பயணித்தார். இப்படி இரு தலைவர்களும் மாறி, மாறி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில், டி.கே.சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கர்நாடக அரசியல் பரபரப்பு குறித்து மேலவை உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிபிரசாத்தை டெல்லிக்கு அழைத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.
இப்படி தினமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் முதல்வர் மாற்ற பிரச்னைக்கு கட்சி மேலிடம் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில் காங்கிரசில் குதிரை பேரம் நடக்கிறது என்று குற்றம்சாட்டும் பாஜ எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி, 50 எம்எல்ஏக்களுடன் டி.கே.சிவகுமார் வந்தால் அவரை முதல்வராக்கி காட்டுகிறேன் என்று அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கொந்தளித்து போன காங்கிரஸ் தலைவர்கள், குதிரை பேரம், ஆட்சியை கவிழ்ப்பது போன்ற குறுக்குவழி பாஜவினருக்கு தான் அத்துப்படி.
அந்த நிலை காங்கிரசில் வரவில்லை. 5 ஆண்டுகளில் 3 முதல்வர்களை மாற்றியது பாஜவினர் தான் என்று பதிலடி கொடுத்துள்ளனர். இப்படி தலைமை மாற்றம், அமைச்சரவை மாற்றம் குறித்து ஒவ்வொரு எம்எல்ஏவும் ஒரு கருத்தை பதிவு செய்து வருவதால் அரசு பணிகள், மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாமல் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ள திட்டமிடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்பிரச்னையை காங்கிரஸ் விரைவில் முடித்துக்கொண்டு தான் குளிர்கால பேரவை கூட்டத்தொடருக்கு வர வேண்டும் என்று பாஜ தலைவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்த அமைச்சர் பிரியாங்க் கார்கே, ராகுலிடம் இருந்து சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு விரைவில் தகவல் வரும் என்று கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவருடன் இணைந்து பணியாற்றி உள்ளதால் அவர் யாருக்கு உறுதியாக ஆதரவளிப்பது என்ற தர்மசங்கடத்தில் தவிக்கிறார். அதனால் சோனியா, ராகுல் ஆகியோர் தலைமை மாற்றம், அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து முடிவெடுப்பார்கள் என்று கூறி நழுவிக்கொள்கிறார்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு தலைமை மாற்ற விவகாரம் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போன்று ஆகிவிட்டதால் தினமும் ஒவ்வொரு கருத்தை கூறிவருகிறார்கள். இதனால் காங்கிரஸ் அபிமானிகளும், கட்சி தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் தான் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. ஆனால் உட்கட்சி பூசலால் மக்கள் வெறுப்பை சம்பாதித்துவிட கூடாது என்று ஆதங்கத்தில் இருக்கின்றனர். கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தலைமை மாற்ற விவகாரத்தில் சோனியா, ராகுல் தலையிட்டு சுமூகமான தீர்வை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் மேேலாங்கிய ஆலோசனையாக உள்ளது.


