மாணவர்கள், பார் கவுன்சில் குழப்பத்திற்கு மத்தியில் சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பு நிராகரிப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதிலால் பரபரப்பு
டெல்லி: நால்சார் சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ெடல்லியில் மாணவர்கள் நடத்திய பேரணியில் போலீசார் நடத்திய தாக்குதல் மற்றும் பெலட் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உரிய மனு தாக்கல் செய்யாமல் வீடியோ ஆதாரங்களை திரையிடக் கோரிய வழக்கறிஞரிடம், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவுறுத்தியது. அப்போது தலைமை நீதிபதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனிடையே, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் ஐதராபாத்தில் உள்ள ‘நால்சார்’ சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை நீதிபதியை சிறப்பு விருந்தினராக அழைப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், ஜூலை 22ம் தேதி நடந்த விசாரணையின் போது தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் 1,400 மாணவர்களில் 400க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிர்ப்பு குரல் எழுப்பினர். இந்த விவகாரத்தில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, தலைமை நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை கண்டறிந்து அவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்வதை தடை செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பியதால் பிரச்னை பூதாகரமானது.
பின்னர் கடுமையான எதிர்ப்புகள் காரணமாக பார் கவுன்சில் தனது சுற்றறிக்கையை திரும்பப் பெற்றதுடன், உச்ச நீதிமன்றமும் பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஜோத்பூரில் நடைபெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, இந்த சர்ச்சை குறித்து பேசிய இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘ஐதராபாத் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே அந்த விழாவில் நான் பங்கேற்பதற்காகன வாய்ப்பே இல்லை’ என்றார்.
தலைமை நீதிபதியின் இந்த திடீர் அறிவிப்பால் நால்சார் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு உள்ளன.