தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றும் தற்போதைய தவெக ஆட்சி அந்த திட்டங்களால் மக்களுக்கு பயன் இல்லாத அளவுக்கு அமல்படுத்தி வருகிறது. மகளிர் விடியல் பயணத்தை வெறும் மகளிர் பயணம் என்று மாற்றி இலவச பேருந்துகளை குறைத்து மகளிரை திண்டாட செய்துள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் தனிப்படை தொடங்கிய நாள் முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மாநிலத்தில் பெருகிவிட்டது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் பிரதிநிதிகளை வைத்தே ‘டிரக் அம்பாசிடர்’ என்ற ஒரு கண்காணிப்பு குழுவை உருவாக்கினார். இந்த திட்டத்தை பெருமிதத்தோடு பேசிய அண்ணாமலை முன்னாள் முதல்வரை மனதார பாராட்டியுள்ள ஒரு சான்று போதும் திமுகவின் பொற்கால ஆட்சிக்கு. ஆனால் தவெக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கு கைமீறி போய்விட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வீதியிலும் இவர்களது கட்டுப்பாடற்ற ஆட்சியின் லட்சணம் சிரிக்கிறது. கஞ்சா உள்பட போதை ெபாருட்கள் சரளமாக நடமாடி வருகிறது. போதையால் குற்றச்செயல்கள் பெருகிவிட்டது. நாள்தோறும் 5 கொலைகளுக்கு மேல் நடக்கிறது. சண்டைகள், சச்சரவுகள் என்று ஒரு அமைதியில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. இளைஞர்கள், மாணவர்களை காவல் துறையால் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவர முடியவில்லை.
பெண்கள் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கிறார்கள். இளைஞர்கள் ஒரே பைக்கில் மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கிறார்கள். சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு மக்களுக்கு ‘புள்ளிங்கோ’ தொல்லை தருகிறார்கள். அமைச்சர்கள் சுயமாக முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்கும் நிலையில் இல்லை. அதனால் அமைச்சர்களை அதிகாரிகள் மதிப்பதே இல்லை.
நாங்கள் எளிமையானவர்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள ஒவ்வொருவரும் பள்ளிகள், அம்மா உணவகம், மருத்துவமனைகளுக்கு சென்று ஆய்வு செய்து ரீல்ஸ் எடுத்து போடுகிறார்கள். அமைச்சர்களை பார்த்து தவெக நிர்வாகிகள் முதல் தொண்டன் வரை அரசு அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்து ரீல்ஸ் போடுகிறார்கள். இவர்களை யார் கட்டுப்படுத்துவது. கட்சி தலைவர் என்ற முறையிலோ, முதல்வர் என்ற முறையிலோ விஜய் எந்த எச்சரிக்கையும் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குவதாக தெரியவில்லை.
அரசு மீது குற்றம்சாட்டினால், மாண்புமிகு தமிழக முதல்வர் ‘வாயில நல்லா வருது..’ என்று டயலாக் பேசுகிறார். ஆட்சிக்கு வந்தவர்கள் புதியவர்கள், அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறோம். அமைச்சர்கள் புதியவர்களாக இருந்தாலும் அதிகாரிகள் புதியவர்கள் இல்லையே. அதே போல் அத்தியாவசிய துறைகளான காவல்துறை, மருத்துவம், பள்ளி கல்வித்துறை, உணவு பொருள் வினியோகம் உள்ளிட்டவற்றில் பொறுமை கடைபிடிக்க கூடாது.
நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போனால் பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்று மக்கள் அச்சப்பட தொடங்கிவிடுவார்கள். அதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆட்சி அமைந்தது முதல் எங்கே சட்டம் ஒழுங்கு என்று மக்கள் கேட்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
