இனிப்பு வழங்குவதை தடுக்க காவல்துறையை பயன்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கத்தான் செய்யும்; சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கை மூட துடிக்கும் தவெக அரசு: முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்
சென்னை: இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கு மட்டுமே காவல் துறையை பயன்படுத்தினால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கத்தான் செய்யும் என்றும், சிறைவாசிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களை தவெக அரசு மூடிவிட்டு தனியாரிடம் கமிஷன் டீல் பேசுகிறாரா அமைச்சர் கலெக்சன் குமார் என்றும் முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக ஆட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் நடைபெற்று வருகின்ற பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு ஒரு முயற்சி நடப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் மத்திய சிறைசலைகள் மூலமாக நடத்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. அங்கே இறைச்சி மற்றும் சிறை துறை மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் தனியாருக்கு தாரைவார்க்கின்ற அந்த மகத்துவமான பணியை தவெக அரசு செய்ய போகிறது.
‘மக்கள் பணத்தை தொடமாட்டோம்’ என்று வீராவேசமாக பேசுவார்கள். ஆனால் கண்ணுக்கு தெரியாத இடத்தில் கமிஷன் அடிக்கிறார்கள். இதுதான் தவெக அரசின் தாரக மந்திரமாக இருக்கிறது. எந்த துறையிலும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை தனியாருக்கு தாரைவார்ப்பதிலேயே தனிக்கவனம் செலுத்துகின்ற அரசாக தவெக அரசு இருக்கிறது. இந்த டம்மி அரசாங்கம் விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு குறித்து கவலைப்படவில்லை. வரப்போகிற இடைத்தேர்தலுக்கு என்ன செய்து நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியுமா என்று அவர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய பொதுவுடமை தோழர்கள் இன்றைக்கு சிறைத்துறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகிற அந்த பொருட்கள் விற்பனை நிலையங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை வரவேற்க போகின்றார்களா அல்லது ஆதரிக்க போகின்றார்களா அல்லது அனைத்து பிரிசன் பஜார்களும் தனியாருக்கு செல்வதை வரவேற்க போகின்றார்களா? கைதிகள் தப்பி செல்கிறார்கள் என்ற வாதத்தை சாக்காக வைத்து தனியார் மயமாக்குகிறார் கலெக்சன் குமார்.
சட்டத்துறையில் ஆடு மேய்ப்பவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, மின்சார துறையில் ஒரு யூனிட் மின்சாரம் 41 ரூபாய்க்கு கொள்முதல், இப்பொழுது சிறைத்துறையில் தனியாருடன் லாபி அமைத்து அவர்களிடம் கலெக்சன் போடுகிறாரா என்று மக்கள் கேள்வி கேட்பார்களா இல்லையா? எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரீல்ஸ் மூலமாக ஆட்சி நடத்தி விடலாம், மக்களை ஏமாற்றி விடலாம். பொய்யான வதந்திகளை பரப்பிவிடலாம். அதன் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று தொடர்ந்து தப்பு கணக்கு போட்டு கொண்டு இந்த அரசு, மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கின்றது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி இன்றைக்கு விழா நடத்துகிறார்கள். திமுக ஆட்சியில் கொண்டு வந்த புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா காண்கிறது என புதுக்கோட்டையில் திமுகவினர் இனிப்பு வழங்கினால் அதைத் தடுக்கிறார்கள் காவல்துறையினர். சந்தி சிரிக்கும் சட்டம்- ஒழுங்கை ஒழுங்குபடுத்த காவல்துறையை பயன்படுத்தாமல், பந்தோபஸ்துக்கும்-இனிப்பு வழங்குவதை தடுப்பதற்கும் பயன்படுத்தினால் கொலைகளும்-கொள்ளைகளும் பெருகாமல் என்ன செய்யும்?
முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு தொடக்க விழாக்களை நடத்திவிட்டு செல்கிற ரீல்ஸ் ஆட்சியாகதான் இந்த தவெக ஆட்சி இருக்கிறது. வெறும் ரீல்ஸ் மூலமாகவே 5 ஆண்டு காலத்தையும் ஓட்டிவிடலாம் என்று கருதும் தவெக ஆட்சிக்கு நிச்சயமாக 5 தொகுதி இடை தேர்தலிலும் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


