ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற லோசான் டைமண்ட் லீக் (Lausanne Diamond League 2026) ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தத் தொடரில் தனது இந்த சீசனின் மிகச்சிறந்த வீச்சாக 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அவர் அசத்தினாலும், இலங்கையின் இன்-ஃபார்ம் வீரரான ரமேஷ் பத்திரகே 88.14 மீட்டர் வீசி முதலிடத்தைப் பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் வெறும் 0.09 மீட்டர் (9 செ.மீ) மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான இந்தப் போட்டியின் முதல் சுற்றில் ரமேஷ் பத்திரகே முன்னிலை வகித்த நிலையில், இரண்டாவது சுற்றில் அபாரமாகச் செயல்பட்ட நீரஜ் சோப்ரா முதலிடத்திற்கு முன்னேறினார். இருப்பினும், அடுத்த சுற்றிலேயே சுதாரித்துக்கொண்ட ரமேஷ் பத்திரகே மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி இறுதி வரை அந்தத் தக்க வைத்துக் கொண்டார்.
இதற்கிடையே, கிரெனடா நாட்டின் ஆண்டெர்சன் பீட்டர்ஸ் 86.69 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். நீரஜ் சோப்ரா மற்றும் பீட்டர்ஸ் இருவரும் இந்த சீசனின் தங்களது சிறந்த வீச்சுகளைப் பதிவு செய்திருந்தாலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் தங்கப்பதக்க வெற்றியாளரான ரமேஷ் பத்திரகே தொடர்ந்து தனது மூன்றாவது டைமண்ட் லீக் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.



