Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காதலியை சரமாரி தாக்கி கிணற்றில் தள்ளி கொலை: வாலிபர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகள் ரோஷினி (21), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் பணியில் சேருவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் மகன் சக்திவேல்(29) என்பவரும் படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் பயிற்சி மையத்தில் இருந்து ரோஷினியும், சக்திவேலும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பாடகம்-மன்சூராபாத் சாலையில் சென்றபோது திடீரென இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ரோஷினியை சரமாரி தாக்கியுள்ளார். மேலும் அருகே உள்ள கிணற்றில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சக்திவேல் நள்ளிரவு போளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர், போலீசாரிடம் ‘நானும், ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். இதனால் நான், ரோஷினியிடம் உடனே நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறினேன். ஆனால் ரோஷினி மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரை கன்னத்தில் அறைந்தேன். இதனால் ரோஷினி, அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த பகுதி மங்கலம் காவல்நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மங்கலம் போலீசார் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ரோஷினி கிணற்றில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரோஷினியின் சடலத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரோஷினியின் தலையில் பலத்த காயங்கள் இருந்தது. எனவே அவரை, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு கிணற்றில் தள்ளியிருக்கலாம். அல்லது அவரை தாக்கி, கிணற்றில் தள்ளி கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார், சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே உண்மை தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.