Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை 41 சதவீதம் அதிகரிப்பு

எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 41 சதவீதம் அதிகரித்து புதிய சாதனையை படைத்துள்ளது.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடிக்கிறது. இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன. எனவே, இவற்றை வாங்க மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். வாகனங்கள் பதிவு அடிப்படையிலான வாகன் இணையதள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் டூவீலர், 3 சக்கர வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு வாகனங்கள் உட்பட 2,39,025 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1,69,360 ஆக இருந்தது.

எலெக்ட்ரிக் டூவீலர்களை பொறுத்தவரை கடந்த மாதத்தில் 1,48,7400 ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகியுள்ளன. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 92,536 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 61 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நாட்டின் மொத்த எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் டூவீலர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரலில் 55 சதவீதமாக இருந்தது. ஜிஎஸ்டி மறு சீரமைப்புக்கு பிறகு விலை குறைப்பும் இதற்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

மேலும் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனையில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, ஏதெர் எனர்ஜி, ஹீரோ விடா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஆகிய டாப் 5 உற்பத்தியாளர்களின் சந்தை பங்களிப்பு கடந்த மாதத்தில் 84 சதவீதமாக உள்ளது. அதேநேரத்தில் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை 64,549. இது முந்தைய ஆண்டு விற்பனையான 62,489 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், எலெக்ட்ரிக் வாகன சந்தையில் இவற்றின் பங்களிப்பு கடந்த ஆண்டு இருந்த 37 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாகக் குறைந்து விட்டது.

கடந்த மாதத்தில் நாடு முழுவதும் 1,06,905 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இவற்றில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு 60 சதவீதம். பயணிகள் வாகனங்களை பொறுத்தவரை எலெக்ட்ரிக் பயணிகள் வாகன விற்பனை வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. பயணிகள் வாகனங்களில் கார்கள், எஸ்யுவி மற்றும் எம்பிவிக்கள் சேர்த்து 23,265 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு ஏப்ரலில் விற்பனையான 13,409 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 73 சதவீத அதிகரிப்பாகும்.

எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்சின் 8,500 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 77 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. சந்தைப் பங்களிப்பு 37 சதவீதம். இவற்றில் டாடா நெக்சான், பஞ்ச், டியாகோ மற்றும் ஹாரியர் இவி கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

இதுபோல், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 5,394 எலெக்ட்ரிக் கார்களை விற்று 24 சதவீத சந்தை பங்களிப்பை தக்க வைத்துள்ளது. வின்பாஸ்ட் நிறுவனம் முதன் முறையாக கடந்த மாதத்தில் 1000 கார்கள் விற்பனை எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இந்த நிறுவனத்தின் விஎப்6, விஎப்7 மற்றும் விஎப் எம்பிவி 7 கார்கள் 1,231 விற்பனை ஆகியுள்ளன. மாருதி சுசூகி நிறுவனமும் 1,222 இவி கார்களை விற்பனை செய்துள்ளது. இதுபோல் வணிக பயன்பாட்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 148 சதவீதம் உயர்ந்து 2,236 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இலகு ரக வணிக பயன்பாட்டு வாகனங்களான சிறிய சரக்கு வாகன விற்பனை 81 சதவீதம் உயர்ந்து 1,817 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் பஸ்களை பொறுத்தவரை கடந்த மாதம் 342 பஸ்கள் விற்பனை ஆகியுள்ளன. இது 23 சதவீத வளர்ச்சியாகும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களை பொறுத்தவரை கடந்த மாத விற்பனை அடிப்படையில் டாடா மோட்டார்ஸ் 799 வாகனங்களுடன் 36 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன யூலர் மோட்டார்ஸ் 518 வாகனங்கள் விற்பனை செய்தும், மகிந்திரா 285 வாகனங்களை விற்றும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

ஹூண்டாய் 2.2 சதவீத வளர்ச்சியுடன் 516, பிஓய்டி இந்தியா 2 சதவீத வளர்ச்சியுடன் 469, கியா இந்தியா 1.5 சதவீத வளர்ச்சியுடன் 342, பிஎம்டபிள்யூ 1.3 சதவீத வளர்ச்சியுடன் 300 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளன. பென்ஸ் 64, டெல்சா 43, வால்வோ 41 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்றுள்ளன.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல், டீசல் விலை எந்த நேரமும் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை உயர்வுக்கு இது ஒரு முக்கிய காரணமாக சந்தை நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.