Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மொழி திணிப்பு

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்தே, மாநிலங்களின் உரிமைகளை பறித்து, அனைத்தையும் ஒற்றை குடையின் கீழ் ஒன்றாக்கும் முயற்சிகள் நடந்தன. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு, ஒரே ரேஷன் என அனைத்தையும் ஒன்றாக்க முயற்சித்த ஒன்றிய அரசு, ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்கிற திட்டத்தின் கீழ் இந்தி மொழியை தேசிய மொழியாக மாற்றிட துடிக்கிறது. இதற்காக தமிழ் போன்ற தொன்மையான மொழிகளை அழிக்க துடிப்பதோடு, மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் இந்தி மொழியை திணித்து வருகிறது.

சில மாநிலங்களில் அதற்கு வெற்றியும் கிடைத்துள்ள நிலையில், தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்கள் மட்டுமே இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. இதற்காக தமிழகத்திற்கான கல்வி நிதியை முறையாக தர மறுப்பதோடு, புறவாசல் வழியாக புதிய கல்வி கொள்கையை திணிக்கவும் ஒன்றிய அரசு முயல்கிறது. இவ்வளவு காலமும் தமிழ்நாடு தன் நிலையில் மாறாது, தொடர்ந்து மொழிப்பற்றோடு திகழ்வதற்கு திராவிட ஆட்சிகளே காரணமாக இருந்தது எனலாம்.

மொழிப்போரால் வளர்ந்த அந்த இயக்கங்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு இன்னமும் உரிய மரியாதை அளித்து வருகின்றன. அதிலும் கடந்த காலத்தில் திராவிட மாடல் அரசானது, இந்தி எதிர்ப்புக்காக தமிழகமே திரண்டு ஒன்றிய ஆட்சியாளர்களை உற்றுபார்க்க வைத்த ஜனவரி 25ம் தேதியை ‘தமிழ் மொழி தியாகிகள் நினைவு நாள்’ என அறிவித்து, தியாகிகளுக்கு வீரவணக்கத்தையும், பேரணிகளையும் நடத்திக் காட்டியது. தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஊறு விளைகிற போதெல்லாம், அதை பாதுகாக்கும் கேடயமாகவே திமுக திகழ்ந்து வந்துள்ளது.

பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும் மொழியை பாதுகாக்க தொடர்ந்து போராடி வந்திருக்கிறார். தமிழ்மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை சீர்குலைக்க ஒன்றியத்தில் இருந்து எத்தனை தாக்குதல்கள் வந்தாலும், அதை தடுத்திடும் எக்கு கோட்டையாக கடந்த கால திராவிட மாடல் ஆட்சி திகழ்ந்தது. இந்நிலையில் தற்போது இந்தி திணிப்புக்கான சாத்தியக் கூறுகளை ஒன்றிய அரசு மீண்டும் கையில் எடுக்க தொடங்கியுள்ளது.

அதன்படி ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 1 முதல் தொடங்கும் கல்வியாண்டில், 9ம் வகுப்பு மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட 3 மொழிகளைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள், 2 இந்திய மொழிகளைப் படிக்க வலியுறுத்துகிறது. இந்தி மொழியை மறைமுகமாக நுழைப்பதற்கு வழிவகைகளை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கு பின்னர், திராவிட கட்சிகள் ஆட்சியில் இல்லாததை கணக்கில் கொண்டு, ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை எப்படியாவது திணிக்க முன்வரக்கூடும். புதுமை என்ற பெயரில் ஆட்சியை பிடித்தவர்கள், மொழி காக்கும் போரில் புறமுதுகு காட்டாமல் இருப்பது அவசியமாகும்.

கடந்த காலங்களில் இந்திக்கு எதிராக எவ்வித அணுகுறை இருந்ததோ, அதை தொடர்ந்து கடைப்பிடிப்பதே தமிழக மக்களுக்கு நலம் பயக்கும். ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால், நம் தாய்மொழி அழிவிற்கே வித்திடும். எனவே மொழி காத்திடும் முயற்சிகளில் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்றைய ஆட்சியாளர்கள் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.