Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரியலூர் அருகே தண்டவாளத்துக்கு அடியில் மண் சரிவு: சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்

அரியலூர்: விழுப்புரம்-திருச்சி ரயில் மார்க்கத்தில் தினமும் பயணிகள் ரயில்கள், அதிவேக ரயில்கள், வாராந்திர விரைவு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் பயணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் வழி மார்க்கத்தில் அரியலூர் அருகே வெள்ளூர் கிராம பகுதியில் ஒட்டக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசிய பணிகளுக்காக அரியலூர் செல்ல தினமும் விழுப்புரம்-திருச்சி ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே வெள்ளூர் பகுதியில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் ரயில்வே கோட்டம் சார்பில் அரியலூர் அருகே வெள்ளூரில் தண்டவாளத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் சுரங்க பாதையில் தண்டவாளத்துக்கு அடியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக தண்டவாளம் பலமிழந்திருக்கும் என கருதி ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வழியே வந்த விழுப்புரத்திலிருந்து திருச்சி வந்த பயணிகள்(வ.எண் 56111) ரயில் மண் சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாக நிறுத்தப்பட்டது. இதேபோல் திருச்சியிலிருந்து அரியலூர் வரும் பல்லவன் ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும், சென்னையிலிருந்து காரைக்குடி சென்ற வந்தே பாரத் விழுப்புரம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் 5 பேர், சுரங்கபாதை ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து மண் சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வழியாக ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது. இதனால் அனைத்து ரயில்களும் 45 முதல் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.