இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதல் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கலவரம் நீடித்து வருகிறது. இதனால் மணிப்பூர் சட்டப்பேரவையை குக்கி பழங்குடியின எம்எல்ஏக்கள் புறக்கணித்து வந்தனர். இந்நிலையில், முதல்முறையாகக் குக்கி இன எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நேற்று பங்கேற்றனர். இம்பாலில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் குக்கி பீப்பிள்ஸ் அலையன்ஸ் கட்சியின் சைகுல் தொகுதி எம்.எல்.ஏ. கிம்னியோ ஹவோகிப் ஹாங்ஷிங், சைது தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ஹவோகோலெட் கிப்ஜென் ஆகியோர் பங்கேற்றனர்.
இருவரும் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குக்கி எம்.எல்.ஏ.க்களின் நேரடி பங்கேற்பு மாநிலத்தில் ஒற்றுமை மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான சாதகமான நடவடிக்கை என்று முதல்வர் ஒய். கெம்சந்த் சிங் வரவேற்றார். பல்வேறு சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையின்மையை குறைக்க அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். முன்னதாக,இன மோதல் பிரச்னைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை இம்பால் செல்ல வேண்டாம் என குக்கி அமைப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



