கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.75 லட்சம் சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்: சென்னையில் 2 பேர் கைது
இதில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்து, சந்தேக பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரபீக் என்ற 2 பேரும் மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் சந்தேகித்த 2 பயணிகளையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதில் சந்தேகம் அதிகமானதால், அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டியில், ஏராளமான சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் உயிருடன் நடமாடுவதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை எண்ணி பார்த்ததில், அட்டை பெட்டிக்குள் மலேசியாவில் இருந்து சென்னையை சேர்ந்த 2 பயணிகளும் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் கடத்தி வந்திருப்பதாகத் தெரியவந்தது.
இதுகுறித்து சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, நட்சத்திர ஆமைகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து சென்னையை சேர்ந்த 2 கடத்தல் பயணிகளிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, இவ்வகை சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை பெரிய பங்களாக்களின் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். அதோடு, இவற்றுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதால் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
அதே நேரத்தில், இவ்வகை நட்சத்திர ஆமைகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால், நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள், மனிதர்களில் பலர் வெளிநாட்டு நோய்க் கிருமிகளால் பெரிதும் பாதிக்கப்படுவர். நீர்நிலைகள் பாதித்து, சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படும் என்று ஒன்றிய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்ப இருதரப்பு அதிகாரிகளும் முடிவு செய்தனர்.
மேலும், எந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் இவை கொண்டு வரப்பட்டதோ, அதே விமானத்தில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பவும், அதற்கான செலவுகளை சென்னையை சேர்ந்த 2 கடத்தல் பயணிகளிடம் வசூலிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்றிரவு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்ற தனியார் ஏர்லைன்ஸ் விமானத்தில் 5400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக நட்சத்திர ஆமைகளை சென்னைக்கு கடத்தி வந்த 2 பயணிகளையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.